பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

பெரியாரின் பேரன்

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் கலையரசன் அவர்களது திருமணம், தமிழர் தலைவர் மானமிகு அய்யா வீரமணி அவர்கள் தலைமையில் 31.08.2012 அன்று,அவரது சொந்த ஊரான உல்லியக்குடி கிராமத்தில் நடைபெற்றது.

உல்லியக்குடி, அரியலூர்
 மாவட்டத்தில் உள்ள உள்ளடங்கிய சிறு கிராமம். ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் சென்றாலே, பரபரப்பாகக்கூடிய ஊர். இந்த குக்கிராமத்திற்கு திராவிடர் கழகத்தின் தலைமைக் கழகமே படையெடுத்ததில் ஊர் மக்கள் பிரமித்து போயினர்.

ஊர் மக்களை பொறுத்தவரையில், கலை ஒரு எளிய குடும்பத்தை சேர்ந்த பெரியார் திடலில் பணிபுரியும் தோழர். அவரது திருமணத்திற்கு தமிழர் தலைவர், அவரது துணைவியார், தலைமை நிலைய செயலாளர் அன்புராஜ், துணை செயலாளர் ஒரத்தநாடு குணசேகரன் என திரண்டிருந்ததில் அவரது தகுதி உணர்ந்தனர் .

அதிலும் லண்டன் சுற்றுப் பயணம் சென்றிருந்த, தமிழர் தலைவர் அவர்கள் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று திரும்பியுள்ள நிலையில் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தது அவரது அன்பை காட்டுகிறது.

விடுதலை பத்திரிக்கைக்கு, தந்தை பெரியார் அவர்களது படைப்புகள் தேவைப்பட்டால் அதனை எடுத்துக் கொடுக்கும் பணியை தொடர்ந்து செய்து, தற்போது பெரியார் எந்த தலைப்புகளில் என்ன பேசியிருக்கிறார் என்பதை விரல் நுனியில் வைத்திருப்பவர்.

இது குறித்து சொல்லும்போது, " நம்மை எல்லாம் படிக்க வைத்த பகுத்தறிவு பகலவன் பெரியாரின் எழுத்துக்களை படித்து தொகுப்பது எனது பேறு " என்று பெருமிதப்படுபவர். இந்தக் கடமை உணர்வும் பொறுப்புணர்வும் தான் இவரது சிறப்பு. இதனால் தான் அனைவரும் வந்திருந்து வாழ்த்தினர்.

தோழர் கலையின் பணி சிறப்பு குறித்து குறிப்பிட்டு, தமிழர் தலைவர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள். தாலி அடிமை சின்னம் என்பதை வலியுறுத்தி, மணமக்கள் மோதிரம் அணிவித்து திருமண வாழ்வை துவங்கினர்.

எளிமையான, சிக்கனமான, சுயமரியாதை திருமணம், பெரியார் வழியில்.

# உண்மையான பெரியாரின் பேரன்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக