பிரபலமான இடுகைகள்

சனி, 17 நவம்பர், 2012

அதிமுக ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம்

அண்ணன் பன்னீர்செல்வம்....

அ.திமு.க-வின் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர். 1996-லிருந்து தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் ஒன்றிய செயலாளர். அதே போல 1996-லிருந்து அரசியல் களத்தின் எதிர் எதிர் முனைகளில் நாங்கள் இருவரும்.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், யாரும் இவரைப் போல் தொடர்ந்து ஒன்றிய செயலாளராக நீடித்ததில்லை. அ.தி.மு.கவின் தலைமையை குறித்து தெரிந்தவர்களுக்கு, இது எவ்வளவு சிரமமான காரியம் என்பது தெரியும்.

உள்ளாட்சி தேர்தல்களில் இருமுறையும், சட்டமன்ற தேர்தலில் ஒரு முறையும் வெற்றி வா
ய்ப்பை இழந்து, இந்த முறை தான் உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியக்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்.

ஆனால் தொடர்ந்து பணியாற்ற இயலாமல் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகம் செயலிழந்ததால் கடந்த வாரம் இயற்கை எய்திவிட்டார்.

நாற்பத்தெட்டு வயதில் மரணம் என்பது மிகுந்த வருத்தமான செய்தி. தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு, திருமணம் செய்து கொள்ளவில்லை, இன்னொருவர் வாழ்க்கையை பாழ்படுத்திவிடக் கூடாதே என.

எளிமையான மனிதர். தனக்கென தொண்டர்கள் பலம் கொண்டவர். பொது வாழ்விற்கு தன்னை அர்பணித்துக் கொண்டவர். அதனால் இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.

என்னிடம் கட்சி கடந்து அன்பு கொண்டவர். அரசியலை தாண்டி பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொள்வோம். ஆனால் அரசியல் ரீதியான விமர்சனங்களும் மேடைகளில் ஒலிக்கும்.

1996ல் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில், நாங்கள் இருவரும் எதிரெதிர் வேட்பாளர்கள். ஒரு நாள் இரவு பிரச்சாரம் முடிந்து, ஒரே ஹோட்டலில் உணவருந்தக் கூடிய சூழல், அங்கு எவ்வாறு தேர்தல் பணியாற்றுவது என அறிவுரைக் கூறினார்.

2006 சட்டமன்றத் தேர்தல், மீண்டும் இருவரும் களத்தில் வேட்பாளர்களாக எதிர்முனைகளில். நான் வெற்றி பெற்றாலும், வாழ்த்துக் கூறினார்.

இரங்கல் தெரிவிக்க, அவர் இல்லம் சென்ற போது, “ தலைவா, வாழ்த்துக்கள். ஆளுங்கட்சியாக தொகுதிக்கு நிறைய செய்ய முடியும். சிறப்பாக பணியாற்றுங்கள். “ என தொலைபேசியில் அவர் வாழ்த்தியதே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது

# மக்கள் மனதில் “ பன்னீர் “ தூவி மறைந்துவிட்டார்...

4 கருத்துகள்: