பிரபலமான இடுகைகள்

புதன், 12 டிசம்பர், 2012

அன்புள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி


அன்புள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே,
வணக்கம்.

உங்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்துவது குறித்து வாதப் பிரதிவாதங்கள் போய் கொண்டிருக்கின்றன.

உங்களை சூப்பர் ஸ்டார் ஆக்கிய தமிழகத்திற்காக, நீங்கள் ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லை. மகராஷ்டிராவை பூர்விகமாகக் கொண்டு, கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட நீங்கள் தமிழ் திரையுலகை சுரண்டிப் பிழைக்கிறீர்கள்.

இவையெல்லாம் உங்கள் மீதான குற்றச்சாட்டுகள். இதை கேட்கும் பொழுது தலையாட்டத் தான் தோன்றுகிறது.

ஆனால், சிவாஜி ஒரு ரூபாயோடு வாழ்க்கையை திரும்பத் துவங்க வேண்டிய சூழலில், அந்த ஒர் ரூபாய் நாணயத்தை சுண்டுகிறீர்களே, அந்த இடத்தில் எங்களுடைய மனதையும் சுண்டிவிடுகிறீர்கள்.

அபூர்வராகங்கள் திரைப்படத்தில், நீங்கள் வரும் முதல் காட்சியில், விரிய திறந்தது இரும்பு கேட் அல்ல, தமிழ் ரசிகர்களின் மனக் கதவு தான். அன்று உள்ளே நுழைந்தவர் தான். சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டீர்கள்.

16 வயதினிலே பரட்டையாக, "இது எப்படி இருக்கு" என்று பன்ச் டயலாக் பேசிய போது தமிழ் ரசிகன், வில்லனையும் ரசிக்கத் துவங்கினான். "முள்ளும் மலரும்", "தப்புத்தாளங்கள்" என நடிகனாக பரிணமித்தீர்கள்.

பிரியா-வில் ஹீரோவாக கொடி பறக்கவிட்ட நீங்கள், பில்லா-வில் விஸ்வரூபம் எடுத்தீர்கள். கெட்டதும் செய்கிற நல்லவன் ரோலுக்கு இன்றைக்கும் உங்களை விட்டால் ஆள் இல்லை.  படிக்கட்டில் ஓடி வந்து, "மை நேம் இஸ் பில்லா" என்று நீங்கள் பாடத் துவங்கும் போது தன்னை பில்லாவாக நினைக்காத ரசிகன் இல்லை.

சின்ன சின்ன கண்ணசைவு, விரல் சொடுக்கம் என உங்கள் ஒவ்வொரு அசைவும் ரசிகனுக்கு பிடித்துப் போனது. அன்னை ஓர் ஆலயத்தில் மென்மையாக ஏற்றுக் கொண்டவன்,  அன்புக்கு நான் அடிமை முரட்டுத் தனத்தை விரும்பினான்.

மகேந்திரனின் ஜானியில் கிளாசிக் ஹீரோவாக பிரகாசித்தவர், அடுத்து எஸ்.பி.முத்துராமனின் ஜனரஞ்சக முரட்டுக் காளையில் "பொதுவாக என் மனசு தங்கம்" மூலம் கிராமத்தின் மூலைமுடுக்கெல்லாம் எல்லைய விரித்தீர்கள்.

அது என்னவோ உங்களுக்கு அனைத்துவிதமான இயக்குநர்களும் கிடைத்தார்கள்.  எல்லா இசையமைப்பாளர்களும் ஹிட் பாடல்களாக கொடுத்தார்கள். நெருப்புப் பொறி பறக்கும் வசனங்களாக வந்து விழுந்தன.

ரங்கா பார்த்துவிட்டு அதிரடி ரங்கா வாக திரிந்த நாங்கள், மூன்றுமுகம் பார்த்துவிட்டு " இந்த அலெக்ஸ்பாண்டியன் பேரக் கேட்டா, வயித்துல இருக்கும் குழந்தை கூட வாய மூடிக்கும்" என வசனம் பேசி, போலீஸ் மிடுக்கும் காட்டினோம், உங்களால்.

ஆறிலிருந்து அறுபது வரை முதிர்ச்சி, தில்லுமுல்லு காமெடி, நெற்றிக்கண் வில்லத்தனம், போக்கிரிராஜா ஆக்க்ஷன், புதுக்கவிதை காதல், தங்கமகன் நடனம், நல்லவனுக்கு நல்லவன் செண்டிமெண்ட், ராகவேந்தர் பக்தி. உங்கள் படங்களில் வெரைட்டி இல்லை என்று சொன்னவர் யார் ?

ராஜாதிராஜா, பணக்காரன் என தொடர் மாஸ் ஆக்க்ஷன் படங்களுக்கு இடையில், ஸ்டைலிஷாக தளபதி, கிராமத்து எஜமான், கலகல வீரா.

தாழ்வு மனப்பான்மை கொண்ட இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் அடையாளம் நீங்கள். உங்களை ரோல்மாடலாக மனதில் தாங்கி முன்னேறியவர்கள் உண்டு. அண்ணாமலை ஒரு உத்வேகம்.

ஒரு சினிமாவின் துவக்க விழா, ஒரு அரசாங்கத்தை அசைக்கும் என்பதற்கு உங்கள் பாஷா உதாரணம். "உண்மையைச் சொன்னேன்", நீங்கள் சொல்லும் போது  இந்த இரண்டு வார்த்தைக்கு  தான்  எவ்வளவு பவர் ?

பாபாவில் ஏற்பட்ட சரிவிலிருந்து மீள்வீர்களா என பலர் ஆருடம் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் சந்திரமுகியில் ஆனாயசமாக எழுந்து நின்றீர்கள். வேட்டையன் நடை மனதில் அப்படியே மனதில் நிற்கிறது. உங்களுக்கு வயது என்ன ? " மாப்பு வச்சய்யா ஆப்பு ".

சிவாஜியில் மீண்டும் நிரூபணம் செய்தீர்கள் ரஜினியின் பலத்தை. அதிலும் மொட்டை பாஸ் எம்.ஜி.ஆர், சபாஷ். கிடைக்கும் சின்ன,சின்ன வாய்ப்பை எல்லாம் ஸ்கோர் செய்கிறீர்கள்.

ஷங்கரின் ' எந்திரனில்' பொருந்துவாரா என படத்திற்கு முன்பே விமர்சனங்கள்.  வசீகரனாக யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம், உங்களை தவற யாரும் எந்திரனாகியிருக்க முடியாது.

பள்ளியை கட் அடித்த எனது 5 வயது மகன், இன்று கே-டிவியில் " ரங்கா" பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். கேட்டால் ரஜினி பிடிக்குமாம். அடுத்து "சிவாஜி 3D" பார்க்க வேண்டுமாம். இது யாரால் முடியும் ?

அதனாலேயே வாழ்த்துகிறேன், " பிறந்த நாள் வாழ்த்துக்கள்".

இந்த தலைமுறையையும் மகிழ்விக்கிற நீங்கள், அடுத்த தலைமுறையையும் மகிழ்விக்க வேண்டும். தொடர்ந்து நடிக்க வேண்டும், ஹீரோவாகவே, சூப்பர் ஸ்டாராகவே, முக்கியமாக ரஜினியாகவே ....

ரஜினியாக மட்டும் பார்க்கிறேன், மாஸ் எண்டர்டெயினராக....வாழ்த்துகிறேன் !


ரசிப்புடன்
ரஜினி ரசிகன்.

1 கருத்து:

  1. //உங்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்துவது குறித்து வாதப் பிரதிவாதங்கள் போய் கொண்டிருக்கின்றன.///

    ரஜினி நடிப்பை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது அது மறுக்க முடியாத உண்மை, அது போல அவரை வாழ்த்துவதில் தவறு ஏதுமில்லை .... ஆனால் இந்த மீடியா அளவுக்கு அதிகமாக தூக்கி புகழ்பாடுவது பற்றிதான் வாதப் பிரதிவாதங்கள் போய் கொண்டிருக்கின்றன.

    ///தாழ்வு மனப்பான்மை கொண்ட இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் அடையாளம் நீங்கள். உங்களை ரோல்மாடலாக மனதில் தாங்கி முன்னேறியவர்கள் உண்டு. அண்ணாமலை ஒரு உத்வேகம்.///

    இந்த வரிகள் மிக மிக உண்மை மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள் சிவசங்கர் எஸ்.எஸ்

    பதிலளிநீக்கு