பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 2 ஜூன், 2013

தினமும் பாடும் எனது பாடல் காற்றோடும் ஆற்றோடும்

மெல்ல திறந்தது கதவு - கல்லூரியில் சேர்ந்து பார்த்த முதல் படம். இளையராஜா எம்.எஸ்.வியோடு இணைந்து இசை அமைத்த படம். ஊருசனம் தூங்கிருச்சி, வா வெண்ணிலா என அனைத்து பாடலும் ஹிட்.


"சின்னச்சின்ன வண்ணக்குயில்" பாடல் கல்லூரி ஹாஸ்டலில் ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டு, திரும்ப திரும்ப போடப்பட்ட எண்ணிக்கை புரொஜெக்டர் ஆப்பரேட்டருக்கே தெரியாது. இந்த பாடலின் இடையே வரும் "ஒஹஹோ ஒஹஹோ" ஹம்மிங் அடுத்த ஹாஸ்டல் வரை எட்டும், ஒட்டு மொத்த மாணவர்களின் குரலில்...


மௌனராகம் திரைப்படத்தில் இதை தவிர அனைத்து பாடல்களும் ஹிட். அதிலும் 'மன்றம் வந்த தென்றலுக்கு, நிலாவே வா' பாடப்படாத கல்லூரி மேடைகளே கிடையாது. உருகி உருகிப் பாடுவார்கள் ராஜாவின் இசையில் உருகி.


கடலோரக் கவிதைகள். முட்டம் சின்னப்பதாஸாக மாறி ' அடி ஆத்தாடி இளம் மனசொன்னு' பாடலை ஹாஸ்டல் பாத்ரூம்களை ரெக்க்கார்டிங் தியேட்டராக பாவித்து ஹிட் அடித்து திரிவார்கள் மாணவர்கள். ராஜாவின் கைங்கர்யம். 'போகுதே போகுதே, கொடியில மல்லிகப்பூ' பாடாத வாய்கள் இல்லை.

கல்லூரி சூழலில் 'மெல்ல திறந்தது கதவு', நகர சூழலில் 'மௌனராகம்', கடலோர சூழலில் 'கடலோரக் கவிதைகள்' இப்படி எந்த படமாக இருந்தாலும் பாடல்கள் ஹிட்டடித்த ராஜா தன் களமான கிராமத்து கதை அமைந்து விட்டால் விடுவாரா.


'அம்மன் கோவில் கிழக்காலே' ஒவ்வொரு பாடலும் சொல்லி வைத்து ஹிட். பீட்டர் விடும் சென்னை மாணவர்களும் பாடிய பாடல்கள். 'சின்ன மணிக்குயிலே' அப்போது திருமண வீடுகளின் தேசியகீதம். 'பூவ எடுத்து ஒரு மாலை, உன் பார்வையில் ஓராயிரம், காலை நேரப் பூங்குயில்' காதுகளில் இன்றும் ஒலிக்கிறது.


அவர் கையிலிருக்கும் வாத்தியம் மட்டும் எப்படி தனி ஒலி தருகிறது, எப்படி வித்தியாசமாய் இசைக்கிறது, அனைவரையும் கட்டிப் போடுகிறது....


வீட்டை பிரிந்து கல்லூரி விடுதியில் தங்கிய எங்களுக்கெல்லாம் அப்போதைய தோழர் ராஜா தான். இசை போட்டியில் பங்கேற்கும் நண்பர்கள், காதல் மன்னர்களாய் திரிந்தவர்கள், தனியாய் படிப்பவர்கள், தத்துவவாதிகள் என எல்லோருக்கும் அப்போது அவர் தான் உற்ற துணை.
இன்றும் அவர் தான் உற்ற துணை.


"காலை நேர பூங்குயில் கவிதை பாட தூண்டுதே
கலைந்து போன மேகங்கள் கவனமாக கேட்குதே
இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம்
பட்டு விரித்தது புல்வெளி பட்டுத் தெறித்தது விண்ணொளி"


# தினமும் பாடும் எனது பாடல்
காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக