பிரபலமான இடுகைகள்

வியாழன், 31 அக்டோபர், 2013

எதிர்கட்சிக்காரன் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு....

பட்டசபை

ஆளுங்கட்சி உறுப்பினர் கவுண்டமணி பேச எழுகிறார். அமைச்சர்கள் வரிசையில் உட்கார்ந்திருக்கும் கார்த்திக் இவரை பார்த்து சிரிக்கிறார். அவரைப் பார்த்து கவுண்டமணி கையை ஓங்குகிறார்.

 “பாட்டவைத் தலைவர் அவர்களே, நான் கேட்க விரும்புவது ஒன்னு தான். ஆட்சி வந்து மூனு வருஷம் ஆச்சு. ரெண்டாவது வருஷமே என்னை மந்திரியாக்கறதா பேச்சு. ஆனா இன்னும் ஆக்கல.

இந்த டகால்டி தலையன் செந்தில்லாம் முதல்வர். இது வரைக்கும் மந்திரிசபைய 10 தடவ மாத்தியாச்சி. ஆனா எனக்கு இன்னும் வாய்ப்புக் கொடுக்கல. எனக்கு என்ன கொறச்சல்.

ஊருக்குள்ள இந்த ஆல் இன் ஆல் அழகுராஜாவ பத்தி கேட்டுப் பாருங்க. அண்ணன் நல்லவரு, வல்லவருன்னு சொல்வாங்க. நல்லா சைக்கிள்லாம் பெண்டு எடுப்பாரு, ஆக்குவாருன்னு பேசிப்பாங்க.

பட்டசபைல எதிர்கட்சிக்காரன் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு நான் தான் பேசிக்கிட்டுருக்கேன் மேன். வேற எவன் பேசறான். இந்தக் கார்த்திக்குலாம் பேச வருமா, சமயத்தில அவன் என்ன பேசறான்னு அவனுக்கே புரியாது. அவன்லாம் மந்திரி.

இந்த டோமர் வாயன் சந்தானம். வெறும் பன்ச் டயலாக்கா பேசுவான். ஆனா ஒன்னாவது அர்த்தம் இருக்குமா, ஆனா அத கேட்டுகிட்டு அவன் மந்திரியாக்கிட்டான் செந்திலு.

சரளாவ மந்திரின்னா ஒத்துக்கலாம். லாங்-ஜம்பல எதிர்கட்சிகாரன் உதைக்க ஓகே. வாய தொறந்தா எதிர்கட்சிகாரன் மேல கூவம் பாயும்.

இவன பாரு, சத்தியராஜூ, பொறக்கும் போதே நடிக்கன்னு பொறந்தவன். டைப்டைப்பா மூஞ்ச வச்சிக்கிட்டு ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி ஆக்சன் குடுப்பான் . இவனுக்கு போலீஸ் டிபார்ட்மெண்ட்.

“அவ்வ்வ்வ்னு சவுண்ட்டு உட்டே அவன்கூட மந்திரியாயிட்டான்யா. அவன் கெட்ட கேடு எஜுகேஷன். இவன் எதிர்கட்சிகாரன திட்டியிருக்கானா ? சந்துக்கு சந்து அடி வாங்கிகிட்டு வருவான். இல்லன்னா எதிர்கட்சிகாரன் சைக்கிள்ளேயே ஏறி போயிடுறான்

அந்த பாளுனர் பாச்சையா வேற போண்டா சாப்பிட்டுகிட்டு எனக்காக காத்துகிட்டு இருப்பாருய்யா. அவரு வேற ஊர் ஊரா கிளம்பிட்டாருன்னா, புடிக்க முடியாது. சீக்கிரம் மந்திரியா ஆக்குங்கய்யா.

ஏய் மேன். இதான் லிமிட். இனிமே எதிர்கட்சிகாரன் திட்டமாட்டேன். உங்களையே திட்டுவேன். என்ன மந்திரியாக்கற வரை திட்டுவேன்.

மேசையில் இருக்கும் புத்தகங்களை எடுத்து செந்திலை அடிக்கிறார் கவுண்டமணி. பாய்ந்து பிடிக்கிறார். செந்தில் ஓடுகிறார்.

 “ஏய் செந்தில் நான் ஒன்ன என்ன கேட்டேன், மந்திரி வேணும்னு கேட்டேன்“ கவுண்டமணி புலம்பி கொண்டே கண் விழிக்கிறார். பக்கத்தில் செந்தில் சட்டை கிழிந்து உட்கார்ந்து அழுது கொண்டு இருக்கிறார்.


# ஏன் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ?


நான் கவிஞனுமில்லை....

பத்திரிக்கையாளர் பெ.கருணாகரன் சார் தன் முகநூல் நண்பர்களை கவிஞர்களாக்கி அழகு பார்க்கனும்னு ஆச பட்டார்.

"சாத்தான் சிரித்தான் சத்தமாக" என்பதனை முதல் வார்த்தையாகக் நொண்டு கவிதை எழுதக் கேட்டுக் கொண்டார்.

நான் உடனே டிரை பண்ணினேன்....

கீழ்கண்டவை நம்ம படைப்புகள்:

"சாத்தான் சிரித்தான் சத்தமாக
நீர் எமை கவிஞனாக்க
முனையும் போது..."

"சாத்தான் சிரித்தான் சத்தமாக
நாம் முகநூல் கணக்கு
துவங்கிய போது...."

பயந்து லைக் போட்டுட்டார் !


"சாத்தான் சிரித்தான் சத்தமாக
அவர் லைக் போட்டு
ஒரு சத்ருவை உருவாக்கியதற்காக"

இப்போ இதை படிக்கும் உங்களுக்காக:


"சாத்தான் சிரித்தான் சத்தமாக
என் கவிதை வடிவில்
உங்களைப் பார்த்து..."

"சாத்தான் சிரித்தான் சத்தமாக
கவிஞர்கள் பேனாவை
தூக்கும் போதெல்லாம்...."

                    

புதன், 30 அக்டோபர், 2013

கரண்டியால தேய்ச்சா, மாவு கரண்டியோடவே ஒட்டிக்கிட்டு வருது....

வீட்டில் ஒரு நாள்....

"எங்க கஷ்டம் உங்களுக்கு எங்க தெரியுது ?"
"ஏன். என்னாச்சி ?"
"எவ்வளவு நேரமா கூப்பிடறேன், சாப்பிட வாங்கன்னு. முடிச்சுட்டு நான் கிளம்பனும். கோதுமை தோசை ஊத்தறது எவ்வளவு கஷ்டம். அதுவும் இது உடைச்ச கோதுமை. ஊத்தி பார்த்தா தான் தெரியும்"

அப்ப தான் முடிவு செய்தேன். பெண்ணுக்கு ஆண் சமம் என்பதை நிருபிக்க நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது, விடக்கூடாது என.

"இப்போ பசிக்கல. பிரட் சாப்பிட்டுகிறேன்" சமாளித்தேன். பணிக்கு கிளம்பினார்.

களத்தில் இறங்கினேன். சமையலறைதாங்க....

மாவே பயமுறுத்தியது. அரிசி மாவு நல்லா திக்கா இருக்கும். இதுல தண்ணி மேல நிக்குது, கீழ மாவு செட்டிலாயிடுச்சி. வேற வழியில்லை, பின் வாங்கக் கூடாது.

முதல் தோசை. ஊத்தும் போது ஒண்ணும் தெரியல. ஊத்தி முடிச்சுட்டு, கரண்டியால தேய்ச்சா, மாவு கரண்டியோடவே ஒட்டிக்கிட்டு வருது. தடுமாறி ஒட்டு போட்டு ஒரு ஷேப்புக்கு கொண்டு வந்தேன்.

திருப்பி போடும் போது தான் நிலவரம் தெரிந்தது. ஏழு,எட்டு துண்டாக ஆனது தோசை. பொறுமையாக ஒவ்வொரு துண்டாக திருப்பி போட்டேன். வேகற மாதிரி தெரியல. எண்ணெயை காட்டினேன். வேக ஆரம்பித்தது.

ஒவ்வொரு துண்டும் சில்லி சிக்கன் கணக்காய் மின்னியது, எண்ணெயின் புண்ணியத்தில். பசி நெருக்கியது. அடுத்த தோசையை கஷ்டப்பட்டு ஊத்திட்டு, பக்கத்திலிருந்த சாம்பாரை தோசை துண்டுகளில் ஊற்றப் போனேன். ஆகா, இது மாவு இல்ல.

அப்புறம் அடுத்தப் பாத்திரத்த பார்த்து சாம்பார கண்டுபிடிச்சி, தோசை துண்டுகளின் தலையில் ஊற்றி ஊற வச்சேன். இதே போல ஒரு வழியா இரண்டு தோசைய சுட்டுகிட்டு சமையற்கட்டிலிருந்து வெளியேறினேன். உண்மை, தான். கஷ்டம் தான் ஒத்துக்கனும்.

ஆனா கஷ்டத்திலும் ஒரு வேல நடந்திருக்கு. ஆமாங்க, எல்லாத்தையும் டேலி பண்ணி என்ன தோசை சுட்டிருக்கேன்னு கண்டுபிடிங்க.

"சாம்பார் ஃபிரைடு உடைச்ச கோதுமை தோசை"
எவ்வளவு அருமையான கண்டுபிடிப்பு. செம டேஸ்ட். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் செஃப்களோட புதுப்புது டிஷ் கதை இது தான் போல.

# பேட்டண்ட் உரிமைல்லாம் வேண்டாம். நீங்களும் சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க !


                                

செவ்வாய், 29 அக்டோபர், 2013

சட்டமன்றத்தில் துணைக் கேள்வி கேட்க பட்டபாடு.....

சட்டசபையில் மூன்று நாட்களாக எனக்கு துணைக் கேள்வி கேட்கும் வாய்ப்பு தரப்படவேயில்லை. கைத் தூக்கி தூக்கி அசந்து போனேன். ஒரு கட்டத்தில் என் அருகில் இருப்போர்,"நீ கைத் தூக்க வேண்டாம். உன்னால் துணைக் கேள்வி வாய்ப்பே மறுக்கப்படுகிறது" என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். 

இன்றும் மூன்று துணைக் கேள்விகளுக்கு வாய்ப்புக் கேட்டு கைத் தூக்கினேன். என்னை பார்க்கவே மாட்டார். என் பக்கமே திரும்ப மாட்டார். அவரது உதவியாளர்கள் பெயர் எழுதிக் கொடுத்தாலும் கண்டுக் கொள்ளமாட்டார்.

இப்படியாக வாய்ப்பு மறுக்கப்பட்டது. நான் ஒரு கட்டத்தில் கொதிநிலையை எட்டிவிட்டேன். தி.மு.க கொறடா அண்ணன் சக்கரபாணி என்னை சமாதனப்படுத்தினார். அவர் வற்புறுத்திய பிறகு, கேள்வி கேட்க வாய்ப்பளித்தார் சபாநாயகர். ஒரு மர்மப் புன்னைகையோடு.

"குன்னம் தொகுதியில், செந்துறை ஒன்றியத்தில், செந்துறையையும் பெண்ணாடத்தையும் இணைக்கும் சாலை நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. ஆனால் அதில் மூன்று கி.மீ தூரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமானது. அதனால் அகலப்படுத்த முடியாமல் இருந்தது. அந்தப் பகுதியை நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்படைவு செய்ய ஊராட்சி ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்த சாலை அரியலூர் மாவட்டத்தையும் கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய சாலை. இந்த சாலையினை ஒட்டி சிமெண்ட் ஆலைகள், சர்க்கரை ஆலை உள்ளன. சாலையை ஒட்டியே சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் உள்ளன. தேவையான அளவு போக்குவரத்து அடர்வு உள்ளதாக மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளிலும் உறுதியாகி அறிக்கை நெடுஞ்சாலைத் துறை வசம் உள்ளது. இந்த சாலையை அகலப்படுத்தி கொடுத்தால் எங்கள் பகுதி மக்களுக்கு பேருதவியாக இருக்கும். செய்து தர அமைச்சர் முன் வருவாரா ?" என்று கேட்டேன்.

அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி," ஊராட்சி ஒன்றிய சாலை ஒப்படைப்பு செய்வதை நெடுஞ்சாலைத்துறை ஏற்றுக் கொண்டிருந்தால், உறுப்பினர் சொல்வது போல் போக்குவரத்து அடர்வு இருந்தால் அகலப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும்" என பதிலளித்தார்.

மூன்று நாட்கள் போராட்டத்திற்கு பிறகு வாய்ப்பளித்த சபாநாயகருக்கு நன்றி சொன்னேன். அதை சபைக் குறிப்பிலிருந்து நீக்கி விட்டார்.

# நன்றிய கூட....


                                

திங்கள், 28 அக்டோபர், 2013

சட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை

தமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது.

                                

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற தமிழ்மக்களின் குரலை சட்டசபை எதிரொலிக்குமா என்ற எண்ணம் தான் புதிய ஆர்வத்திற்கு காரணம். தி.மு.க தலைவர் கலைஞர் இதனை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என அறிக்கை விடுக்க ஆவல் கூடியது.

சட்டப்பேரவை கூடிய 23- ந் தேதி காலை ச.ம.உ-க்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் இருக்கை மாற்றம் குறித்த அறிவிப்பு இடம் பெற்றது. தே.மு.தி.க அதிருப்தி அணியை சேர்ந்த மாஃபா.பாண்டியராஜன், சாந்தி ஆகியோருக்கு தனியாக இடம் ஒதுக்குவதற்காக தி.மு.க, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் இடம் மாற்றப்பட்டிருந்தது. அதை பார்த்த முன்னாள் அமைச்சர் தங்கம்.தென்னரசு "குருபெயர்ச்சிக்கும் சனிப்பெயர்ச்சிக்கும் நடுவில் ஒரு இடப்பெயர்ச்சி" என கமெண்ட அடிக்க சிரிப்பலை படர்ந்தது.

மறைந்த முன்னாள் ச.ம.உறுப்பினர்கள் 11 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் காண்கிற ஏற்காடு தொகுதியின் மறைந்த ச.ம.உ பெருமாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தியதோடு சபை ஒத்திவைக்கப்பட்டது. பதவியில் இருக்கும் ச.ம.உ மறைந்தால் வேறு அலுவல்கள் மேற்கொள்ளாமல் அவை ஒத்திவைக்கப்படுவது மரபு.

இரண்டாம் நாளாக 24-ந் தேதி. உறுப்பினர்களுக்கு இரவு வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் காமன்வெல்த் குறித்த தீர்மானம் இல்லை. காலையில் இதை கண்ட பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பு. எதிர்கட்சிகள் என்ன நடவடிக்கை மேற்கொள்ள போகிறார்கள் என்ற கேள்வியோடு பத்திரிக்கையாளர்கள் எதிர் கட்சிகளின் அலுவலகங்களில் ஆய்ந்து கொண்டிருந்தனர். சபை உள்ளே வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் காமன்வெல்த் குறித்த அரசினர் தனித் தீர்மானம் தனி இணைப்பாக புதிதாக சேர்க்கப்பட்டு வழங்கப்பட்டது.

10 மணிக்கு அவை துவங்கியது முதலில் கேள்வி நேரம். மின்துறை முடிந்து உள்ளாட்சித்துறை. பெண்ணாகரம் (இ.கம்யூ) ச.ம.உ நஞ்சப்பன் "தாகம் தீர்க்கும் ஒக்கனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை துவங்கி வைத்த முதலமைச்சருக்கு நன்றி" என்று விசுவாசத்தை காண்பித்து கேள்வியை துவங்கினார். "இன்னும் பல கிராமங்களுக்கு இந்த தண்ணீர் வந்து சேரவில்லை" என்று சொல்ல, உள்ளாட்சி அமைச்சர் "பொத்தாம் பொதுவாக குற்றம் சுமத்தாமல் குறிப்பிட்டு சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்" என விசுவாசத்தை பொருட்படுத்தாமல் பதிலளித்தார்.

கேள்வி நேரத்தில் புகழ்வது, குற்றம் சுமத்துவது கூடாது என்பது மரபு. ஆனால் அ.தி.மு.க உறுப்பினர்கள் விராலிமலை விஜயபாஸ்கரில் துவங்கி, யார் முதல்வரை அதிகம் புகழ்வது என்ற போட்டி துவங்கியது. சீர்காழி ச.ம.உ சக்தி "பார் வியக்கும் புதுமைப் பெண்ணே, இனி பாரதம் உங்கள் பின்னே" எனக் கவிதை சொல்லி இன்று முதலிடம் பிடித்தார்.

இவர்களை விஞ்சினார் தே.மு.தி.க அதிருப்தி மாஃபா பாண்டியராஜன். "வாக்கினில் உண்மை ஒளி, வாழ்வினில் தெய்வ ஒளி உடைய அம்மாவுக்கு வணக்கம்" என வணங்க, ஜெ திரும்பி வணங்க, பாண்டியராஜன் முகத்தில் சிவகாசி மத்தாப்பூ வெளிச்சம். (காலையில் அ.தி.மு.க கொடி கட்டிய காரில் தான் வந்தார் என்பது கூடுதல் தகவல்)

அடுத்து எல்லோராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட காமன்வெல்த் குறித்த அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன் மொழிந்து பேசினார்.

தீர்மானத்தை வரவேற்று பேச அனைத்துக் கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. செ.கு.தமிழரசன் துவங்கினார். வழக்கம் போல் முதல்வரை புகழ்ந்து வரவேற்றார்.

கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு தீர்மானம் குறித்து நீட்டி முழக்கி பேசிக் கொண்டே போக சபா சைகை காட்டி முடிக்க சொன்னார். பார்வர்ட் பிளாக் கதிரவன் முதல்வருக்கு நன்றி சொல்லி தீர்மானத்தை வரவேற்றார். அதிசயமாக சரத்குமார் ஒரே வரியில் தீர்மானத்தை ஆதரித்து பேசி அமர்ந்தார். டாக்டர்.கிருஷ்ணசாமி ஈழத்தின் பாதிப்பை விளக்கி தீர்மானத்தை வரவேற்றார்.

ஜவாஹிருல்லா பேச்சு உணர்ச்சி வேக்தோடு இருந்தது. மனித உரிமை ஆர்வலர்கள் 10 பேர் தூக்கிலிடப்பட்டதற்காக, நைஜிரீயா நாடு காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப் பட்டது போல இலங்கை நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். காங்கிரஸ் சார்பில் பேச கோபிநாத் எழுந்தபோது, எல்லோரும் ஆவலோடு பார்த்தார்கள். "சிலோன் மக்களுக்காக பாடுபட்டவர் எங்கள் தலைவர் ராஜீவ்.  இலங்கைக்கு 4000 கோடி ஒதுக்கி மத்திய அரசு தமிழர்களுக்கு அத்தனை உதவிகளையும் செய்கிறது" என்று ஆரம்பித்தவர் தீர்மானத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு சார்பாக வரவேற்கிறேன் என்றார்.

இந்திய கம்யுனிஸ்ட் சார்பாக பேசிய ஆறுமுகம் முதல்வரை புகழ்ந்து தீர்மானத்தை ஆதரித்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிட் சார்பாக பேசிய சௌந்தர்ராஜன்"காமன்வெல்த் அமைப்பு என்பது இந்தியா பிரிட்டிஷ்க்கு அடிமைப்பட்டு கிடந்ததை நினைவுப் படுத்துகிறது. இந்த அமைப்பே தேவை இல்லை என்பது எங்கள் நிலைப்பாடு, இந்தியா இலங்கை தமிழர் நலனுக்காக ராஜ்ஜிய அழுத்தம் கொடுக்க வலியுறுத்துகிறோம்" என பேசி அமர்ந்தார். தீர்மானத்தை ஆதரிக்கிறார்களா, இல்லையா என்பதை சாதுரியமாக குறிப்பிடவில்லை.

தி.மு.க சார்பாக பேசிய மு.க. ஸ்டாலின் அவர்கள் பேச்சு மிக நிதானமாக, கச்சிதமாக அமைந்தது. "கலைஞர் கொடுத்த அறிக்கை, தி.மு.க செயற்குழு தீர்மானம், டெசோ தீர்மானம், பிரதமருக்கு கலைஞரின் விரிவான கடிதம் என தி.னு.க எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட்டு, ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் குறிப்பிட்டார். காமன்வெல்த் மாநாடு குறித்து கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளின் நிலைப்பாடுகளை எடுத்துக் கூறி, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்ட குரலாக ஒலிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். மாநாட்டை புறக்கணிக்க இந்திய அரசை வலியுறுத்தி, தீர்மானத்தை வரவேற்றார்.

தே.மு.தி.க சார்பில் பேசிய பண்ருட்டி "முதல்பாதி எதிர்பார்த்தது, பின்பாதி எதிர்பாராதது" என்ற பன்ச் டயலாக்கோடு ஆரம்பித்து தீர்மானத்தை வரவேற்க, சபா ஐந்து நிமிடம் ஜெ' வாழ்த்துப்பா பாடினார்.

மீண்டும் முதல்வரின் வேண்டுகோளுக்கு பிறகு தீர்மானம் சபையால் ஒரு மனதாக நிறைவேறப்பட்டது.

சட்ட அமைச்சர் கொண்டு வந்த சட்ட முன்வடிவை நிதி அமைச்சர் முன்மொழிய சபையில் நிறைவேற்றி இன்றைய நிகழ்வுகள் இத்தோடு முடிந்தது அமைதியாக.

முகநூல் மார்க்குக்கு கடுப்பில் ஓர் கடிதம் !

அன்பு சகோதரர் மார்க், 

லைக் இல்ல. உன் கமெண்ட் அறிய ஆவல்.

நிற்க. தங்கள் புண்ணியத்தில் முகநூல் மூலமாக புதுபுது நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். பழைய நண்பர்களும் மீண்டும் தொடர்புக்கு வந்துள்ளார்கள். பள்ளி, கல்லூரி நண்பர்களை கண்டு பிடித்து புளகாங்கிதம் அடைந்துள்ளோம். மறுக்கவில்லை...

எழுத்துக்கு எழுத்து அர்த்தம் கண்டுபிடித்து எங்களை ஒழுங்கு படுத்தும் புரூப் ரீடர்கள் கிடைத்துள்ளார்கள். ஸ்டேடசின் இன்னொரு அர்த்தத்தை சொல்லி குட்டும் செய்தி ஆசிரியர்கள் உள்ளார்கள். சுடசுட கமெண்ட் போட்டு விளம்பரம் அளிக்கும் விளம்பர மேனேஜர்கள் சிக்கியுள்ளார்கள்.

லைக் மட்டும் செய்து மட்டற்ற அன்பு காட்டும் நெஞ்சங்கள் உள்ளார்கள். ஷேர் செய்து பாசம் காட்டும் உள்ளங்கள் உண்டு. காப்பி,பேஸ்ட் அடிக்கும் காப்பிரைட்டர்களும் அதிகம். மொத்தத்தில் குருப்பா செட் ஆயிட்டோம்.

முகநூல் வந்த பிறகு தான் பள்ளிக்கூடத்துல பரிட்சையில விடைன்னு விட்ட கதைய திருப்பி இங்க டிரை பண்ணி எழுத்தாளரா ஆகியிருக்கோம். கல்லூரியில பிட் பேப்பர்ல எழுதி வச்சத எல்லாம் இங்க போஸ்ட் பண்ணி கவிஞரா உருவெடுத்தோம். மொபைல்ல கிளிக்கியத போட்டு புகைப்பட வல்லுநரா டெவலப் ஆகியிருக்கோம். சுருங்க சொன்னா தெறமய பெருக்கியிருக்கோம்.

                               
                          


இப்பப் போய் இப்படி பண்ணிட்டீங்களே !

Page-ல் செய்த வியாபார யுக்தியை fb account-க்கும் கொண்டு வந்துட்டீங்களே. நேற்று ஒரு ஸ்டேடஸ் போட்டுட்டு பார்க்கிறேன். Promote option-ஐ கொண்டு வந்து காசு கேக்கறீங்களே, இது நியாயமா ?

பேஜில் தான் புரமோட் ஆப்சன் வச்சிங்க, நியாயம். மெயின்ல வச்சா நாங்க என்ன பண்றது ? அப்பவே மக்கள் எச்சரிச்சாங்க, காசு பார்க்க மார்க் வழி பாக்குறாருன்னு. இப்பவே எல்லாரோட ஸ்டேடசும் கண்ல படறது இல்லன்னு ஒரு கம்ப்ளெயிண்ட் வர ஆரம்பிச்சிருக்கு.

அப்போ அப்போ ஸ்பான்சர்ட் ஸ்டேடஸ் வரும் போதே நினச்சேன், நம்ம ஸ்டேடச எல்லாம் இப்படி ஸ்பான்சர் பண்ணா தான் எல்லாரும் பார்க்க முடியுனு நிலை வந்துடுமோன்னு. ஆனா இவ்ளோ சீக்கிரம் வரும்னு நினைக்கல.

ஆனா அப்பவே தொல்ஸ்( அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் ) அண்ணன் சொன்னத கேட்டதால தப்பிச்சேன். மார்க்'லாம் புது ஆளு. நம்ம கூகுள் பாரம்பரியமிக்கது. அங்க ஒரு துண்டு போட்டு வைங்கன்னாரு. இங்க போடுற ஸ்டேடச எல்லாம், blog-ல காப்பி, பேஸ்ட் போட்டு வைங்க சேப்-ஆ இருக்கும்னாரு. போட்டு வச்சேன்.

கூட்டம் இல்லன்னாலும் கூகுள் பிளஸ்ல கணக்கு துவங்கிடுங்கன்னாரு. அதையும் செஞ்சேன். இப்போ free-யா feel பண்றேன். இங்க வழியில்லன்னா செட்டா அங்க கிளம்பிடலாம்.

பிளாக்ல செய்திக்கு இடையில் நிறைய படங்களை போட்டு பத்திரிக்கை மாதிரி காட்சி அளிப்பது போல், முகநூல்லயும் பண்ணா நல்லா இருக்கும்னு சொல்லலாம்னு நினச்ச நேரத்தில, நீ முதலுக்கே மோசம் பண்றீயே. வேட்டிக்கு ஆசப் பட்டவன் கோவணத்த உருவுன கதையா ஆயிடுச்சி.

சரி, உன் ஃபேஸ்புக், உன் இஷ்டம்.

நன்றி-ஷேர், பிளாக்-வணக்கம்.

அன்பு ஆப்சன்களுடன்

படைப்பாளிகள் சார்பாக சிவசங்கர்.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

நீங்க ஒரு கிலோ ஆட்டுக்கறி வேணும்னாலும் சாப்பிடுங்க...

“ நீங்க ஒரு கிலோ ஆட்டுக்கறி வேணும்னாலும் சாப்பிடுங்க, தப்பேயில்லை. அதுல இருக்கறது நல்ல கொலஸ்ட்ரால்”

இது என்ன புது கதையா இருக்கு என எண்ணியவாறு என் இடத்தை தேடினேன். அது முத்துநகர் விரைவு ரயில். எழும்பூர் ரயில் நிலையம். ரயில் புறப்பட ஓரிரு நிமிடங்கள். அவர்கள் முன்பே வந்து வசதியாக அமர்ந்து பேச்சை ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒருவர் கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை. அறுபதை தொட்டிருப்பார். ஆனால் தலைக்கு டை, ரிம்லெஸ் கிளாஸ் என இளமையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தார். அவரது தோரணையை பார்த்தால், அரசு அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

எதிரில் இருந்தவர் வேட்டி, சட்டை அறுபத்தைந்து வயதிருக்கும். வியாபாரம் செய்பவராக தோற்றம், நடவடிக்கை. அவர் சொல்வதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். பார்க்கையிலேயே அப்பிராணியாக தோற்றம் இவருக்கு.

இவர் என் பெர்த்தில் அமர்ந்திருக்க, அவர் எதிரில். என் பெர்த்தின் இன்னொரு பகுதியில் ஒரு பெண் அமர்ந்து நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் வந்து நிற்கும் என்னை, யாரும் சட்டை செய்யவில்லை. நான் எதிரில் காலியாக இருந்த சிங்கிள் சீட்டில் அமர்ந்தேன்.

“ ஆட்டுக்கறி சாப்பிடுங்க, டால்டா மட்டும் வேண்டாம். டால்டா சமைச்ச பாத்திரத்த கழுவற சிங்க்-ல பாருங்க. அப்படியே படிஞ்சிருக்கும். கறி சமைச்ச பாத்திரத்த கழுவுற இட்த்த பாருங்க. அப்படி இருக்காது. டால்டா இங்க ப்டியற மாதிரி தான் உடம்பு உள்ள படிஞ்சிடும்.” இப்படி இந்த டாபிக் கொஞ்ச நேரம் போச்சு.

“ சார் அந்த மில்லு” அப்பாவி எடுத்துக் கொடுத்தார். “ ஆமாங்க, டாலர் விலை ஏறுனதுல நிலக்கரி விலை ஏறிடுச்சி. மில்ல ஓட்டுறது கஷ்டம். அப்பவே ஆல்டர் நேட் யோசிச்சிருக்கனும்” இது கொஞ்சம் நேரம். தாம்பரம்.

“சார் எப்பவும் டிரெயின்ல வந்திடுறீங்க, பரவாயில்லை” இவர். “ஆமா பஸ்ன்னு வச்சிக்குங்களேன். தூக்கம் கெட்டுடும். உடம்பு வலிக்கும். டிரெயின்னா ஏறுனம்மா, நீட்டா படுத்திடலாம்” அப்பாவி ஏதோ புது செய்தி கேட்பது போல பிரமித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.

                    

“அந்தப் பிரச்சினையை ஈசியா முடிச்சிட்டீங்க” “அந்த டி.ஐ.ஜிக்கிட்ட போனேன். அவர் பி.ஏ கிட்ட அந்த எஸ்.பிய புடின்னாரு. ஒரே நிமிஷம் எஸ்.பி லைனுக்கு வந்துட்டாருல்ல. அவ்ளோ தான், பிரச்சினை ஓவர்” அவர் காதில் கிசுகிசுக்க, அப்பாவி “குணா” கமல் போல் பரவச நிலைக்கே போய் விட்டார் இவர். செங்கல்பட்டு.

நான் இன்னும் சிங்கிள் சீட்டில் தான். கையில் எடுத்த புத்தகத்தையும் படிக்க முடியாமல் பேச்சு பல டாபிக்குகளை தாண்டி என் காதுக்குள் நீண்டது. காலையும் நீட்ட முடியவில்லை, அங்கு வியாபாரியின் உரச்சாக்கு பை அமைதியாக நின்று கொண்டிருந்தது. நானும் அதைப் போல் அமைதியாக.

“சொந்தமாக ரயில் வைத்திருக்கும் தொழிலதிபர், ராஜீவ் காந்திக்கு நேரடியாக ஃபோன் செய்த எம்.பி, தினம் ஒரு மணி நேர வாக்கிங், மெடிக்கல் காலேஜில் படிக்கும் மகன், அவருக்கு நாலு ஸ்டேட் காலேஜோடு இருக்கும் நெட்வொர்க, எக்மோர் சிங்கப்பூர் லாட்ஜின் திறப்பு விழா அன்று முதல் கஸ்டமராக தங்கி இப்போதும் தங்குவது ” என பேச்சு பரந்து விரிந்துக் கொண்டிருந்தது.

இடையில் டி.டி.ஆர் வந்து பணி முடித்துப் போனார். இருவரும் சாப்பிட்டார்கள். ஃபோன் பேசினார்கள். ஆனால் அவர் பேச்சை தொடர்ந்தார். இவர் மந்திரித்து விட்ட ஆடாய் தலையாட்டிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு தூக்கம் வந்து எனக்கு இடம் விட்டார்கள். விழுப்புரம்.



படுத்த பிறகும் அப்பாவி, “ஆனாலும் நீங்க உடம்ப மெயிண்டெயின் பண்றீங்க” என ஆரம்பிக்க, நான் தலை வரை போர்வையை இழுத்து மூடினேன்.

அப்பாவிகள் கிடைத்தால் எல்லோரும் இப்படித் தான் ஆகிவிடுகிறோமோ....

# எல்ல்ல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாய்...

திடீரென மின்சாரம் தாக்கியது, கைகள் துண்டிக்கப்பட்டது....

சிவநேசன், உடையவர்தீயனூர் கிராமத்தை சேர்ந்தவர். சுமார் ஒரு வருடத்திற்கு முன் ஒரு சம்பவம். வீட்டில் ஃபியூஸ் போனது. அதனை சீர் செய்யும் போது திடீரென மின்சாரம் தாக்கியது. தூக்கி அடிக்கப்பட்டார்.

நினைவு வரும் போது திருச்சியில் மருத்துவமனையில் இருந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் பலனளிக்கவில்லை. இரண்டு கைகளும் முட்டிக்கு மேல் துண்டிக்கப்பட்டு விட்டது.

தற்போது 34 வயதாகிறது. திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கைகள் இல்லாமல் அடுத்தவர்கள் உதவியோடு ஒவ்வொரு நிமிடத்தையும் நகர்த்திக் கொண்டிருந்தார்.

ஜூன் 25 வெள்ளி அன்று தஞ்சாவூர் பவர் கம்பெனியின் லேன்கோ பவுண்டேஷன் மூலம் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடத்தப் பட்ட முகாமில் இவருக்கு கை அளவு எடுக்கப்பட்டது.

18.10.2013 அன்று இவரைப் போன்று அளவு எடுக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன.


                        mail3.jpg


விழாவில் தஞ்சாவூர் பவர் கம்பெனியின் Deputy General Manager செல்வம் கலந்து கொண்டு வழங்கினார். இவர் எனது கல்லூரி நண்பர். இவர் கொடுத்த ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்பு கிடைத்தது.

சிவநேசனுக்கு லேன்கோ நிறுவனத்தின் மூலம் செயற்கை கைகள் வழங்கப்பட்டன. இப்போது அவரால் தனது செல்போனை தானாக உபயோகிக்க முடிகிறது. கையெழுத்திடுகிறார். டம்ளரை தூக்கி நீர் அருந்துகிறார். மீண்டும் சகஜ வாழ்க்கை.

இதே போன்று 39 பேருக்கு செயற்கை கை, கால்கள், ஊன்றுகோல்கள் வழங்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு மூன்று லட்சம். மதிப்பு முக்கியமில்லை. கிராமத்தை சேர்ந்த இவர்கள் எங்கு சென்று இந்த செயற்கை கை,கால்களை வாங்குவது என்று தெரியாதவர்கள்.

இவர்களுக்கு இருக்கும் இடம் தேடி வந்து உதவி செய்த லேன்கோ நிறுவனத்திற்கும், நண்பர் செல்வம் அவர்களுக்கும் தொகுதி மக்கள் சார்பாக நன்றி. அளவுகள் எடுத்து செயற்கை அவயங்களை பொருத்திய ஜெகன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.

13 வயதான வயலூர் பாரதிராஜாவுக்கு செயற்கை கால் பொறுத்தப்பட்டு நடக்க பழக்கிய போது அவரது தந்தையின் கண்களில் ஆன்ந்த கண்ணீர். வரும் போது தூக்கி வரப்பட்ட பிள்ளை போகும் போது தத்தி தத்தி நடந்து சென்றது அழகு.

# வாழ்வின் மகிழ்வான தருணங்கள் !


                         mail1.jpg

சனி, 26 அக்டோபர், 2013

எழுத்தாளர் மிருகம் எழுந்தாச்சு....

என் முகநூல் பதிவுகளை படித்து விட்டு அண்ணன் ஸ்ரீவில்லிப்புத்தூர் கதிரவன் விமர்சனங்கள் வைப்பார். அவர் பத்திரிக்கையாளர் என்பதால் அவர் பார்வையில் சொல்வார். அப்புறம் ஒரு கட்டத்தில் எழுத்து கைகூடி விட்டது, அடுத்து பத்திரிக்கை தான்னு சொன்னார். "ஏண்ணே, ஏன் இந்த கொல வெறி" அப்படின்னு சொல்லி விட்டுட்டேன்.

அப்புறம் ஒரு நாள் ஃபோன் செய்தார். " அண்ணே, உங்க முகநூல் பதிவ எல்லாம் சேமிச்சு வச்சிருந்தேன். லேப்டாப் கிராஷ் ஆயிடுச்சி. ஒரு புத்தகத்துக்கு ரெடி பண்ணிட்டு சொல்லலாம்னு பார்த்தேன். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சி, நீங்க சேமித்து வைத்திருக்கீங்களா ?" அப்படின்னார். "இல்லண்ணே. ஃபேஸ்புக்ல இருக்கறது தான்"னு சொன்னேன்.

                            

மீண்டும் ஒரு நாள் அழைத்தார். "ஏண்ணே, பிளாக்ல இந்த பதிவெல்லாம் போட்டுருக்கிறத சொல்லல ?. இது போதும். புத்தகம் ரெடி பண்ணிடலாம்" அப்படி என்றார். இது போல கழகப் பதிவுகளை பார்க்கிற கழகத் தோழர்கள் முரசொலிக்கு அனுப்பலாமே அப்படிம்பாங்க. நாம அசர்ரதே இல்ல.

அப்பப்போ அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் அண்ணன் சொல்வார், "சார் எழுத்து சூடு பிடிச்சுடுச்சி". சமீபத்தில் ஒரு பதிவில் போட்ட கமெண்ட்டில் சகோதரர் சிவசங்கரன் சரவணன் "அண்ணே...! உங்களுக்குள் தூங்கிக்கிட்ருந்த எழுத்தாளர் மிருகம் எழுந்தாச்சு. உடாம எழுதுங்கள்." என்றார்.

என் கல்லூரி நண்பர் பாலா குறித்த பதிவை படித்த எல்லோருமே கலங்கிப் போனாதாக சொன்னார்கள். அதனை படித்த கழக சொற்பொழிவாளர் அண்ணன் கவிஞர் ஈரோடு இறைவன் அலைபேசியில் அழைத்தார். " உங்க பதிவ படிச்சேன். பாலா மனசுல பதிஞ்சு போனாரு."

"உங்க எழுத்துகளை தொகுத்து புத்தகமா போட்டிடலாம். நான் பதிப்பாளர் கிட்ட பேசறேன். சென்னை வந்துடறேன். கட்டுரைகளை செலக்ட் பண்ணி தொகுத்திடலாம்" என்றார். "அண்ணே, சும்மா தோனுணத எழுதிகிட்டிருக்கேன். நீங்க வேற" என்றேன். "இல்ல நிஜமாதான் சொல்றேன்" அப்படின்னார்.

மறுநாள் காலை ஒரு அலைபேசி அழைப்பு. நக்கீரன் இணை ஆசிரியர் அண்ணன் காமராஜ். "சிவா ஃபேஸ்புக்ல எழுதுறது தான் நல்லா இருக்கு. இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் பத்தி எழுதி அனுப்புங்க. இந்த வாரம் போட்டுடலாம்" என்றார்.

சட்டமன்றம் முடிந்த உடனே உட்கார்ந்து ஸ்டேடஸ் அடிக்கற மாதிரி அடிச்சி அனுப்பி விட்டேன். அதிலருந்து ஒரு பாரா சின்ன ஸ்டேடஸா போட்டேன். அரங்கன்.தமிழ் தனி செய்தியில் கேட்டார். "என்னண்ணே, அப்டேட் சின்னதா இருக்கு ?" "இது டிரெய்லர். சனிக்கிழமை ரிலீஸ்" அப்படி என்றேன். ரிலீஸ் ஆயிடுச்சி.

நன்றி நக்கீரன் ஆசிரியர் திரு.கோபால் அவர்களுக்கும், இணை ஆசிரியர் அண்ணன் காமராஜ் அவர்களுக்கும்.

என் எழுத்தை உற்சாகப்படுத்தி வரும் துணை ஆசிரியர் அண்ணன் கோவி.லெனின் அவர்களுக்கும், பத்திரிக்கையாளர்கள் சகோதரர் யுவகிருஷ்ணா, பாரதிதம்பி, அதிஷா ஆகியோருக்கும் நன்றி பல. 

இதற்கெல்லாம் அடிப்படையாக என் முகநூல் எழுத்துகளை லைக்கி, கமெண்ட்டி ஊக்குவித்த அத்தனை முகநூல் நண்பர்களுக்கும் நன்றி , நன்றி ! 

 நம்ம  முகநூல் மார்க்குக்கும் நன்றி ! (விடமாட்டோம்ல)

# கடையில நக்கீரன் வாங்கி படிச்சிட்டு சொல்லுங்க !

இரண்டு அரசு ஐ.டி.ஐக்கும் அனுமதி, ஒரு கார் பயணம் தான்.

தலைவர் கலைஞர் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார், தலைமைச் செயலகம் நோக்கி. அப்போது தலைவர் கலைஞர் முதல்வர். உடன் சில அமைச்சர்கள். அண்ணன் ஆ.ராசா அவர்களும் உடன்.

"ப.சிதம்பரமும், பெரிய.கருப்பனும் சிவகங்கைக்கு ஒரு ஐ.டி.ஐ கேட்டிருக்காங்க. அலுவலகத்தில நினைவு படுத்துங்க" என தன் செயலாளரிடம் சொல்கிறார் தலைவர். உடனே அண்ணன் ராசா, "அய்யா எங்களுடையதும் பின் தங்கிய மாவட்டம், எங்களுக்கும் ஐ.டி.ஐ வேண்டும்" என்கிறார்.

"ஏற்கனவே அரியலூர்ல ஒரு அரசு ஐ.டி.ஐ இருக்கேய்யா" என்கிறார் தலைவர் கலைஞர். "அய்யா, ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டம் வருவதற்குள் அந்த பகுதி மாணவர்களை தொழிற்கல்விக்கு தயார் செய்தா தான் சரியா இருக்கும். அதே போல பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைவதற்குள் அங்கே இருக்கும் மாணவர்களை தயார் செய்ய வேண்டும்"

"சரி. நீ சொல்ற காரணம் சரியா தான் இருக்குய்யா. ரெண்டும் கொடுத்திடலாம்." இது தலைவர் கலைஞர். தலைமை செயலகம் அடைவதற்குள் இரண்டு ஐ.டி.ஐக்கும் அனுமதி. ஒரு கார் பயணம் தான். இரண்டு ஐ.டி.ஐ-களும் அமைவதற்கு அரசு இடம் இல்லை. தன் தாய்-தந்தையர் பெயரில் அமைந்திருக்கும் அறக்கட்டளை மூலம் தலா அய்ந்து ஏக்கர் இடம் வாங்கிக் கொடுத்தார்.

அடுத்த ஒரு சந்தர்ப்பம். தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் அரசு பொறியியல் கல்லூரிகள் அறிவிக்கப்பட்ட நேரம். அண்ணன் ராசா அரியலூருக்கு ஒரு பொறியியல் கல்லூரி கேட்டார். மற்ற அமைச்சர்கள் "ஏற்கனவே இரண்டு ஐ.டி.ஐ, ஒரு கலைக்கல்லூரி(பெரம்பலூர்), இது வேறயா ?" எனக் கிண்டலடித்தனர்.

"நீங்க சும்மா தர வேண்டாம். 20 ஏக்கர் இடமும், 5 கோடி ரூபாய் பணமும் நிதியாகப் பெற்று தருகிறேன்" என சொல்ல, பொறியியல் கல்லூரி அறிவிக்கப்பட்டது. 20 ஏக்கர் இடமும், நிதியும் வழங்கினார். அரியலூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்டு விட்டது.

அண்ணன் ராசா அவர்கள் ஒரு முறை துறையூர் அருகே மிகப் பெரிய விபத்தை சந்தித்தார். திருச்சியில் முதல் உதவி முடித்து, தனி ஹெலிக்காப்டரில் சென்னை அழைத்து வரப்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் சிகிச்சைப் பெற்று நலமடைந்தார்.

இது குறித்து ஒரு முறை தலைவர் கலைஞர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, "என்னை நீங்கள் எல்லாம் கவனித்துக் கொண்டதால் பிழைத்து வந்தேன். ஆனால் எங்கள் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் இருக்கிற ஏழை மக்கள் பாதிக்கப்பட்டால், தஞ்சையோ, திருச்சியோ சென்று தான் சிகிச்சை பெற வேண்டியிருக்கிறது."

"ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை இரண்டு மாவட்டத்திற்கும் சேர்த்து கொடுத்தால், அரியலூர்-பெரம்பலூர் இடையே அமைத்துக் கொள்வோம். நவீன மருத்துவ வசதிகள் கிடைக்கும். எங்கள் மாவட்டத்து கிராமப்புற ஏழை மக்கள் பயன் பெறுவார்கள்" என சொல்ல மருத்துவக் கல்லூரி sanctioned. 

இப்படி இடம், பொருள் அறிந்து அண்ணன் ஆ.ராசா அவர்கள் முயற்சி எடுத்ததனால் தான் எங்கள் மாவட்டத்தின் வளர்ச்சியே. இன்று அண்ணனின் பிறந்தநாள்.

# வாழ்க அண்ணன், எங்கள் மாவட்டங்களை இன்னும் முன்னேற்ற !




செவ்வாய், 22 அக்டோபர், 2013

பாலாவுக்கு பிறந்தநாள்

நேற்று பாலாவுக்கு பிறந்தநாள். முகநூல் டைம்லைனில் வாழ்த்துக்கள் பார்த்தேன்.

பாலமுருகன், நண்பர்கள் எங்களுக்கு பாலா. பாலா எதிலும் தனித்துவம். அது பெயரிலேயே ஆரம்பித்துவிடும். மற்றவர்கள் Bala Murugan, ஆனால் பாலா Bala Muru'k'an.

பெயரில் மட்டுமல்ல, அனைத்திலும் அப்படி தான். உடுத்தும் உடையில் அப்படி ஒரு நேர்த்தி இருக்கும், கல்லூரி காலத்திலேயே. உடலோடு பொருந்திய கச்சிதமான அளவு. நீட்டாக டக் இன் செய்த பேண்ட், சர்ட். சுத்தமாக, கசங்காமல். இதே போல் தான் எதுவும்.



தான் தங்கியிருக்கும் அறை. படிக்கும் புத்தகம். தான் பயன்படுத்தும் வாகனம். அடுத்தவர்களோடு பேசுவது, பழகுவது. உணவு உண்ணுவது. எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கும். கல்லூரி காலத்திலேயே பெரியவர்களுக்கான முதிர்ச்சி இருக்கும்.

கிராமத்திலிருந்து சென்னை வந்து உழைத்து தொழிலதிபரான தந்தை. அதை உணர்ந்து வசதி வாய்ப்புகள் இருந்தாலும் எளிமையான மகன். கொங்குக்கே உரிய உழைப்பு. இப்படி மற்றவர்கள் கவனிக்கத் தக்க ஒரு நபர் பாலா.

பாலா எனக்கு கல்லூரித் தோழன். மூன்று ஆண்டுகள் அறை நண்பன். ஜூனியராக இருந்தாலும் வேறுபாடு இல்லாமல் வகுப்புத் தோழர்கள் போலவே இருப்போம். நாங்கள் ஊர் சுற்றும் கேங். பாலா தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்கும் மாணவன்.

அண்ணாமலைநகரிலிருந்து மாரியப்பநகர் செல்லும் சாலையில் சிறு ஹோட்டல். உணவருந்த சென்றிருந்தோம். பாலா இலைக்கு முதலில் முட்டைப் பொறியல் வந்து விட்டது. அப்போது பாலாவுக்கு பிடித்த அய்ட்டம். கல்லூரி கால பழக்கப்படி நானும், இன்னொரு நண்பனும் பொறியலில் கை வைத்தோம். பாலா பெர்பெக்ட் ஆயிற்றே. "ஒரு நிமிடத்தில் உங்களுக்கு வராதா?" எனக் கேட்க, எனக்கு கோபம். இரண்டு நாள் பேசவில்லை.

இரண்டு நாள் பொறுத்த பாலா மூன்றாவது நாள், "சிவா, ஒரு வேலை இருக்கு. வாங்க" என அழைக்க சென்றோம். ஒரு முட்டை பொறியல் வாங்கி மூன்று பேரும் சாப்பிட்டோம். "இது தான் வேலை" என பாலா சிரிக்க, அந்த கள்ளமில்லா சிரிப்பில் கோபம் கரைந்தது.

கல்லூரி முடிந்த அடுத்த வருடத்திலேயே பாலாவுக்கு திருமணம். தொழிலில் தீவிரம். இரண்டு பெண் குழந்தைகள் என வாழ்க்கை வேகமாக ஓடியது. அவ்வப்போது அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொள்வோம்.

பாலாவின் மகள் அபரஞ்சிதா ஸ்குவாஷ் விளையாட்டில் டாப். மகளின் ஒவ்வொரு வெற்றியையும், முன்னேற்றத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்வார். சர்வதேச ஆட்டங்களில் அபரஞ்சிதா பங்கேற்றது, வெற்றி பெற்றது பாலாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. பாசமிகு தந்தை.

நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு ரிலாக்சாக ஒரு வெளிநாடு பயணம் மேற் கொண்டார். ஆழ்கடல் ஆழ்ந்து விளையாடும் ஸ்கூபா டைவிங் மேற்கொண்டார், படகில் மனைவியும் மகளும் இருக்க. நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. தேடினால் உடல் தான் கிடைத்தது. ஆழ்கடல் அழுத்தத்தில் இதயம் நின்றுவிட்டது. குடும்பம் துயரக் கடலில்.

ஓராண்டு கடந்து விட்டது. பாலா இன்னும் இருப்பதாகவே மனது நினைக்கிறது. பிறந்தநாளுக்கு வாழ்த்தியவர்களும் அப்படி நினைத்து தான் வாழ்த்தியிருப்பார்கள்.

# முட்டைப் பொறியல் இருக்கிறது. சாப்பிட வருவாயா பாலா ?
 — withBala Murukan P.

திங்கள், 21 அக்டோபர், 2013

பொதுவாழ்வின் சங்கடங்கள்

செந்துறை கழக அலுவலகத்தில் இருக்கும் போது தான் அந்த ஃபோன் அழைப்பு. பெரம்பலூர் நகர செயலாளர் தனது அலைபேசியை அண்ணன் ராசா அவர்களிடம் அளித்தார். பேசிய அண்ணன் அவர்களது முகத்தில் லேசான மாற்றம். "அலுவலகத்தில் இருக்கிறேன், காரில் ஏறி பேசுகிறேன்." என்றார்.

தளபதி அவர்களின் 06- ந் தேதி வருகையையொட்டி, அரியலூர் பொதுக் கூட்ட ஏற்பாடுகளை அண்ணன் ஆ.ராசா அவர்கள் 04.10.2013 அன்று பார்வையிட்டு விட்டு விழுப்பணங்குறிச்சி முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் மறைந்த செந்தில் அவர்கள் படத்தினை திறந்து வைத்து விட்டு, திருமானூரில் கழகத் தோழர் சுந்தர சக்திவேல் திருமணத்தை விசாரித்து செந்துறை விரைந்தோம்.

செந்துறையில் வி.சி.க மாவட்ட செயளாலர் திருமாவளவன் மறைவிற்கு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு, ஒன்றிய தி.மு.க அலுவலகத்திற்கு சென்றோம். கடந்த மாதம் காதணி விழா கண்ட கருப்புசாமி அவர்களது குழந்தைகள் அண்ணன் ராசா அவர்களிடம் ஆசி பெற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அப்போது தான் அந்த போன் அழைப்பு வந்தது. ஃபோனை வைத்த உடன் கழகத் தோழர்கள் சால்வை அணிவித்தனர். தொடர்ந்து குழுமூர் கழகத் தோழர் ராஜேந்திரன் குழந்தைகளோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். டீ வந்தது, அருந்தி விட்டு கார் ஏறினோம்.

மொபைலை எடுத்து டெல்லிக்கு அழைத்தார், "பாப்பா எப்படி இருக்கு ?, ஹாஸ்பிடல் போய் பார்த்துட்டு பேசுங்க" என்றார். அண்ணன் ராசா அவர்களுக்கு ஒரே மகள். டெல்லியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். பள்ளிக்கு சென்றிருக்கிறார். நாட்டிய வகுப்பு. பயிற்சியில் இருக்கும் போது, திடீரென சீலிங் ஃபேன் கழன்று அவரது தலையில் விழுந்து விட்டது. பள்ளியில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள்.

இங்கே அகரம் சீகூரில் ஒரு திருமணம் விசாரித்து, ஆடுதுறை மு.ஊ.ம தலைவர் மலர்வண்ணன் தந்தை மறைவு துக்கம் விசாரித்து விட்டு கார் ஏறினோம். டெல்லியில் இருந்து பார்லிமெண்ட் அனெக்ஸ் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

வடக்கலூரில் ஒரு புதுமணத் தம்பதியரை வாழ்த்திவிட்டு, மூத்தக் கழகத் தோழரின் மனைவி மறைந்ததையொட்டி அவரது படத்தை திறந்து வைத்து விட்டு, லப்பைகுடிகாடு நகரில் மூன்று துக்கம் விசாரித்துவிட்டு, கீழப்புலியூரில் கழகத் தோழரின் புதுமனைபுகுவிழாவில் கலந்து கொண்டு பெரம்பலூர் செல்லும் போது மாலை மணி 4.00.

அலுவலகம் சென்று அண்ணியாருக்கு ஃபோன் செய்து விபரம் கேட்டார். அப்போது தான் மருத்துவமனையில் ஆய்வுகள் முடிந்து வெளியே வந்திருந்தனர். தலையில் வெளிப்புற வீக்கம் தவிர வேறு பாதிப்புகள் இல்லை என்று தெரிந்த பிறகே சகஜமானார். மகளிடம் பேசினார், அதன் பிறகே அண்ணனுக்கு முகம் மலர்ச்சியான நிலைக்கு வந்தது. மிகப் பெரிய விபத்திலிருந்து தப்பியிருக்கிறார்.

காரில் வந்த நான்கு பேரை தவிர வேறு யாருக்கும் இது தெரியாது. அண்ணனும் பதட்டத்தை காட்டிக் கொள்ளாமல் நிகழ்ச்சிகளை முடிக்கும் வரை இயல்பாகவே இருந்தார். தனது வருத்தம் மற்றவர்களை பாதிக்காமல் பார்த்துக் கொண்டார்.

உணவருந்தி மலையாளப்பட்டி பயிற்சி பாசறை ஏற்பாடுகளை காண சென்றோம். 5-ந் தேதியும் இதே போன்று ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார். 6-ந் தேதி தளபதி அவர்களோடு பெரம்பலூர்-அரியலூர் சுற்றுப்பயணம் பொதுக்கூட்டம் முடித்து, தளபதி அவர்களோடு இரவு சென்னை சென்று, நேற்று தான் டெல்லி சென்று மகளை பார்த்தார்.

# பொதுவாழ்வின் சங்கடங்கள்



பெரம்பலூர், அரியலூர் மாவட்ட சுற்றுப்பயணம் - தளபதி கடிதம்

நாம ஒரு நிலைத்தகவல் யோசித்து வைத்திருக்கும் போது, அத வேறு ஒருவர் பதிவு செய்தா எப்படி இருக்கும். அப்படி தளபதி அவர்கள் கலந்து கொண்ட அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட இளைஞர் பயிற்சி பாசறை மற்றும் அரியலூரில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் குறித்து கட்டுரை தயார் செய்ய யோசித்திருந்தேன்.

நேற்று காலை சென்னை பதிப்பு முரசொலியில் அப்படியே கடிதமாக வந்திருந்தது. ஆம், தளபதி அவர்கள் உங்களில் ஒருவன் என்று தொடர்ந்து எழுதி வரும் கடித வரிசையில் " நமது பயணமும் தொடர வேண்டும்" என்ற தலைப்பில் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட சுற்றுப்பயணம் குறித்து எழுதியிருக்கிறார்கள்.

அதைத் தாண்டி மிகுதியாக சொல்ல ஒன்றுமில்லை என்னும் அளவிற்கு நுணுக்கமாக நிகழ்ச்சி குறித்து விவரித்திருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய செய்தி, அவரது உழைப்பு.



ஞாயிறு, 20 அக்டோபர், 2013

சுழலும் சூரியன் - நேரடி அனுபவம்

5-ம் தேதி மாலையே தளபதி அவர்கள் சென்னையிலிருந்து கிளம்பி பெரம்பலூர் வந்து தங்கி விடுவதாக திட்டமிடப் பட்டிருந்தது. பெரியார் திடலில் ஒரு நிகழ்வில் பங்கேற்க வேண்டிய நிலையில், அதை முடித்து இரவு 10.30 மலைக்கோட்டை விரைவு ரயிலில் எழும்புரிலிருந்து கிளம்பினார்கள்.

விடியற்காலை 3 மணிக்கு வரவேண்டிய ரயில் வழக்கம் போல் தாமதமாக வந்தது. 

                          DSC08280.JPG

அரியலூர் ரயில் நிலையத்தில் கழகத் தோழர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு 4 மணிக்கு அரியலூரிலிருந்து புறப்பட்டு, பெரம்பலூர் அண்ணன் ராசா அவர்கள் அலுவலகத்தை அடைந்தார்கள். அப்போது 4.45 ஆகியிருக்கும்.

காலை பணிகள் முடித்து, உணவருந்தி, காலை 08.30 மணிக்கு காரில் ஏறிவிட்டார். வழி நெடுக வரவேற்பை ஏற்றுக் கொண்டு மலையாளப்பட்டியை அடையும் போது 09.45.

                         

 அங்கு கழகக் கொடியேற்றி விட்டு மேடைக்கு வந்த போது மணி 10.00. நண்பகல் 12.30 வரை நாற்காலியை விட்டு எழுந்திரிக்காமல் நிகழ்வை கவனித்தார் தளபதி. ( அதற்குள் நான் 4 தடவை எழுந்து மேடையிலேயே உலாத்திவிட்டேன்).

இரண்டு கி.மீ தள்ளியிருந்த தங்கும் இடத்திற்கு சென்று உணவருந்தி விட்டு அங்கு கழக கொடியை ஏற்றி வைத்து விட்டு சரியாக இரண்டு மணிக்கு மேடைக்கு வந்து விட்டார். மாலை 4.30 வரை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கலந்து கொண்ட 750 இளைஞரணி தோழர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார், 50 தொண்டரணி தோழர்களுக்கும் வழங்கினார். 
                                  

மணி 5.45, மலையாளப்பட்டியிலிருந்து கிளம்பினார்.வழிநெடுக சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள் வரவேற்பை கையசைத்து ஏற்றுக் கொண்டு பெரம்பலூர் அண்ணன் ராசா அவர்கள் அலுவலகம் வந்த போது மணி 7.00. 

                               

குளித்து உடைமாற்றி கிளம்பும் போது மணி 07.30. வழியில் வரவேற்புகளை ஏற்று அரியலூர் மேடை ஏறிய போது 08.15. 

                                                                 
                                                               
                                                                             
                              

தளபதி அவர்கள் பேச ஆரம்பித்தப்போது மணி 08.45. ஒரு மணி நேரம் பேசினார்கள். அரியலூரிலிருந்து கிளம்பும் போது மணி 09.55. கார் பயணம். வழியில் உணவருந்தி சென்னை சென்றடைய எப்படியும் நள்ளிரவு 02.30 ஆகியிருக்கும். 

15 நாள் அலைச்சலில் அசந்து நான் தாமதமாக எழுந்து, கூட்டம் குறித்த செய்திக்காக நாளிதழ்களை டீ'யோடு புரட்டியப் போது மணி காலை 9.00. மொபைல் அழைத்தது. 

"என்ன சிவசங்கர், களைப்பு நீங்கி எழுந்தாச்சா ? கூட்டம் சிறப்பு" அழைத்தவர் தளபதி தான், வேறு யார் !

# கூட்டிக் கழிச்சு பாருங்க, கணக்கு சரியா வரும்.... உழைப்புன்னா தளபதி தான்.

செவ்வாய், 15 அக்டோபர், 2013

தூக்கணாங் குருவி கூடுகள், பாடித் திரியும் பறவைகள் - கெடாத இயற்கை....

மலையாளப்பட்டி.

நல்லக் காரணப் பெயர். மலையை ஆள்பவர்கள் அந்தப் பட்டியில் இருக்கிறார்களா அல்லது மலை அந்தப் பட்டியை ஆள்கிறதா தெரியவில்லை. ஆனால் முப்புறமும் மலைகள் சூழ்ந்துள்ள அந்த ஊரை கண்டவுடன், அது நம் மனதை ஆளும் பட்டியாகி விடுகிறது. 

06.10.2013 அன்று இளைஞர் அணி பயிற்சி பாசறை நடைபெற்ற ஊர். பாசறை நடத்த வேண்டும் என்று சொன்ன அடுத்த நிமிடம் அண்ணன் ராசா அவர்கள் மனதில் தோன்றிய ஊர் இது தான்.


                          

பெரம்பலுரிலிருந்து தலைவாசல், ஆத்தூர் செல்லும் சாலையில் பயணித்தால் வேப்பந்தட்டையை தாண்டி கிருஷ்ணாபுரத்தில் இடது புறம் திரும்பி மலையாளப்பட்டி செல்ல வேண்டும். சமதரையில் செல்லும் போதே மலைகள் கண்ணில் பட ஆரம்பிக்கும்.

அந்த ஊருக்கு சென்றவுடன் உடன் வந்தவர்களுக்கு நம் பகுதியில் இப்படி ஒரு இயற்கை வளம் கொஞ்சும் ஊரா என்ற எண்ணம் தான் ஏற்பட்டது. பெரம்பலூர் பகுதியில் இருக்கும் மலைகள் மரங்கள் இல்லாமல் வறண்டு இருக்கும். ஆனால் இங்கு எங்கு திரும்பினாலும் பசுமை. மலை மீது காட்டு மரங்கள். அரசுக்கு சொந்தமான பகுதி.

மலையடிவாரத்தில் தென்னந்தோப்பு, பாக்குத் தோப்பு என விரிகிறது காட்சி. சமீபத்தில் இங்கு தான் அதிக பட்டாம்பூச்சிகளை பார்த்தேன். இயற்கை சூழல் கெடாமல் இருக்கிறது. மக்கள் வாழ்க்கை முறையும் கெடாமல் இருக்கிறது. வயல்களுக்கு நடுவே வீடு கட்டி வசிக்கிறார்கள்.

வயலில் திரியும் நாட்டுக் கோழிகள் கால்கள் நீண்டு இயற்கையாக இருக்கின்றன. அவை வசிப்பதற்கு நான்கு தூண்கள் நட்டு அவை மேல் கோழி வீடு. இது சிறு வயதில் கிராமங்களில் பார்த்தது. இங்கு தான் மிச்சம் இருக்கின்றன.

மின்சார கம்பிகளில் தூக்கணாங் குருவி கூடுகள். பாடித் திரியும் பறவைகள். மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, சோளம் என விவசாயம் உயிரோடு இருக்கிறது. மலையடி வாரத்தில் முயல்கள், காட்டுப் பன்றிகள் தொந்தரவும் விவசாயிகளுக்கு உண்டு.

                             

ஆழமான கிணறுகள் வெட்டி, அதில் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்து தான் விவசாயம். ஆனாலும் உழைப்பால் விளைவிக்கிறார்கள். நல்ல உழைப்பாளிகள் இந்த மக்கள்.

பாசறைக் கூட்டம் நடைபெற்ற இடம் மூன்று புறம் மலைகள் சூழ்ந்து இயறகை எழில் பொங்கி வழியும் இடம். கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் என்றும் இந்த ஊர் நினைவில் இருக்கும். இடம் நல்ல தேர்வு.


                             

# என்றும் மலையாளப்பட்டி மலை மனதை ஆளும்...

திங்கள், 14 அக்டோபர், 2013

கண்ணுக்கு தெரியாத சரஸ்வதிக்கு பூஜை செய்வதை விட.....

அமெரிக்க அதிபர் ஒபாமா தான் உலகின் உச்சபட்ச விருந்தினராக இருக்க முடியும். அதிகாரத்தில் இல்லாமல் அதிகாரத்தின் பிரதிநிதியாக இன்றும் பார்க்கப்படுபவர் இங்கிலாந்து ராணி எலிசபெத். உலகின் பெரும்பான்மையோரால் அறியப்பட்ட தொழிலதிபர் மைக்ரோசாப்ட் பில்கேட்ஸாக இருப்பார். உலகின் அதிக புகழ் வாய்ந்த நடிகராக டாம் க்ரூய்ஸ் இருப்பார்.

இந்த வரிசை அதிகாரம் வாய்ந்தவர்கள், ராஜ குடும்பம், தொழிலதிபர்கள், நடிகர்கள், தர்மம் செய்பவர்களுக்கு என இருக்கும். இது எதுவும் இல்லாமல் ஒருவர் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஒபாமாவாலேயே விருந்தினராக அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்.

                           Malala Yousafzai: President Barack Obama, First Lady Michelle Obama, and their daughter Malia meet with Malala Yousafzai, the young Pakistani schoolgirl who was shot in the head by the Taliban a year ago, in the Oval Office: Malala Yousafzai meets the Obamas at the White House


                      

"டைம்ஸ்" பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெற்றார். இங்கிலாந்து ராணியால் உபசரிக்கப்பட்டார். அய். நா.சபையில் உரையாற்றினார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு கடைசி நிமிடத்தில் கிடைக்கவில்லை.


                         


இத்தனையும் 16 வயதில். ஆனால் அதற்கான விலை பெரிது. 

அவர் மலாலா. பாகிஸ்தான் நாட்டின் ஸ்வாட் மாநிலத்தை சேர்ந்தவர். ஸ்வாட் ஒரு கால கட்டத்தில் இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளான தலிபான்கள் கையில் இருந்தது. அப்போது பெண்கள் படிக்கக்கூடாது என அவர்கள் கட்டளைப் பிறப்பித்தனர். அது மலாலாவின் மனதை பாதித்தது. மலாலா பி.பி.சிக்கு ஒரு கட்டுரை எழுதினார், தலிபான் ஆதிக்கம் தம் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் பெண் கல்வி குறித்தும். அது 2009, மலாலாவுக்கு 11 வயது.

நியுயார்க் டைம்ஸ் மலாலா குறித்து ஒரு குறும்படம் எடுத்தது. பாகிஸ்தானில் மெல்ல பிரபலமானார் மலாலா. இது தலிபான்களை எரிச்சலூட்டியது. ஆனால் இந்தக் காலக் கட்டத்தில் ராணுவம் ஸ்வாட் பகுதியை தன் கைக்கு கொண்டு வந்திருந்தது. மலாலாவின் பேட்டிகள் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் இடம் பெற்று வந்தது.

பதினைந்தாவது பிறந்தநாள் கொண்டாடி மூன்று மாதம் ஆகியிருந்தது. அப்போதெல்லாம் அவருக்கும் அவர் தந்தைக்கும் தலிபான்களிடமிருந்து எச்சரிக்கை வந்துக் கொண்டிருந்த நேரம். எப்போது வேண்டுமானாலும் சுடப்படலாம் என உடன் இருந்தோரே எச்சரித்து வந்தனர். ஆனால் தலிபான்கள் அது வரை பெண்களை தாக்கியதில்லை, தந்தை தாக்கப்படலாம் என்பது எண்ணம்.

2012 அக்டோபர் 9. மலாலா தேர்வு முடித்து நண்பகல் பள்ளியில் இருந்து வேன் ஏறுகிறார். வேன் ராணுவ செக் போஸ்டை தாண்டுகிறது. தாடி வைத்த ஒரு இளைஞன் ரோட்டின் குறுக்கே வந்து வேனை கைநீட்டி நிறுத்த சொல்கிறான். நிற்கிறது. டிரைவர் அருகில் அவன் வந்து பேசும் போது இன்னொரு இளைஞன் வேனின் பின்புறம் வருகிறான்.

"யார் மலாலா ?". சக மாணவிகள் யாரும் பதில் சொல்லவில்லை. ஆனால் அனைவரும் பயத்துடன் மலாலா முகத்தை பார்க்கின்றனர். வேனில் முகத்தை மூடாமல் இருக்கும் ஒரே பெண் மலாலா. உணர்ந்து கொள்கிறான், கேள்வி கேட்டவன். கைத்துப்பாக்கி உயர்கிறது. இடது கண்ணில் குண்டு பாய்கிறது. அடுத்து இடது தோள்பட்டை. உடன் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் மீதும் குண்டுகள் பாய்கின்றன.

                           

பெஷாவார் ராணுவ மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு இங்கிலாந்து பர்மிங்காம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தலை எலும்பு முறிந்து மூளையில் ஏற்பட்ட அதிவால் வீங்கிவிட்டது. ஒரு முக நரம்பில் ஏற்பட்ட பாதிப்பில் இனி கண்களை திறந்து மூட முடியுமா, மூக்கை அசைக்க முடியுமா, புருவத்தை ஏற்ற முடியுமா, புன்னகைக்க முடியுமா என்ற நிலை எழுந்தது.

எல்லாவற்றையும் தாண்டி வந்தார் மலாலா. லண்டனிலேயே படிக்கிறார். பெண் கல்விக்கான குரலை ஓங்கி ஒலிக்கிறார். தலிபான்களின் அச்சுறுத்தலும் தொடர்கிறது.

இன்னொருபுறம் பாகிஸ்தானில் மலாலா சி.அய்.ஏ-வின் ஏஜெண்ட் என்ற பிரச்சாரமும் நடக்கிறது. துப்பாக்கிச் சூடு சம்பவம் சித்தரிக்கப்பட்டது, பாகிஸ்தானுக்கு எதிராகாவும், இஸ்லாமிய பழமைவாதத்திற்கு எதிராகவும் ஊடகங்கள் கட்டமைக்கும் பிம்பம் என்ற குரலும் எழுகிறது.

மலாலாவின் சமீப குரல் "நான் பாகிஸ்தானின் பிரதமராவேன். அதிக நிதியை கல்விக்கு ஒதுக்குவேன். என் மொத்த தேசத்திற்கும் பணிபுரியும் டாக்டராவேன். எல்லா குழந்தைகளும் கல்வி பெற, பள்ளி செல்ல, கல்விதரத்தை உயர்த்த உதவுவேன்".

எதுவாக இருந்தாலும் கல்வியின் தேவையை சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிக்கும் குரல் மலாலா, உயிருக்கான அச்சுறுத்தல்களை மீறி. அந்தக் குரல் எல்லா தேசத்திற்கும் தேவையானது. இந்தியாவிற்கும்....

# கண்ணுக்கு தெரியாத சரஸ்வதிக்கு பூஜை கொண்டாடும் வேளையில், வாழும் கல்வியின் அடையாளம் மலாலாவின் முழக்கத்தை நடைமுறைப்படுத்த முனைவோம் !