பிரபலமான இடுகைகள்

வியாழன், 12 டிசம்பர், 2013

அப்டேட்டா இருக்கனும்னா, அல்லாத்தையும் தான் படிக்கனும்

"சார், இப்போலாம் வாசகர் கடிதம்லாம் யாராவது படிக்கிறாங்களா ?"
"உண்மை தான். முன்ன மாதிரி படிக்கிறதில்ல தான். ஆனாலும் படிக்கிறாங்க, காரணம் சில சமயம் புத்தகத்தோட வாசகர் கடிதங்கள் சுவாரஸ்யமா அமைஞ்சிடுது"
"அப்டேட்டா இருக்க, எந்தப் பத்திரிக்கையை படிக்கனும் சார்"
"அப்டேட்டா இருக்கனும்னா, அல்லாத்தையும் தான் படிக்கனும்"

இப்படி ஒன் லைனரா அடிச்சி எறிஞ்சார் அவர், மெட்ராஸ் பாஷையில். அவருக்கான பாராட்டு விழா அது.

வழக்கமா இலக்கியம் சார்ந்த பாராட்டு விழான்னா, கவிஞர், எழுத்தாளர்களுக்கா இருக்கும். இது முற்றிலும் வித்தியாசம், 35 வருடமாக பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதும் அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களுக்கு.

                    

                           


யுவகிருஷ்ணா, கே.என்.சிவராமன், நரேன் மூவரும் சேர்ந்து 'lips' அமைப்பை ஏற்படுத்தி முதல் நிகழ்ச்சி இது தான். திரும்ப கைமாறு செய்ய இயலாதவர்களுக்கு விழா நடத்துவதே சிறப்பு. அந்த வகை இது. சத்தியநாராயணனால் நன்றிக் கடிதம் மட்டுமே எழுத இயலும்.

பனுவல் புத்தக நிலையத்தில் நடை பெற்றது. குங்குமம் முதன்மை ஆசிரியர் முருகன் அவர்களும், பொதுவுடைமை எழுத்தாளர் ஜவகர் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். சத்தியநாராயணன் தன் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

"ரேடியோவுல நேயர் விருப்பம் கேட்க முதல்ல எழுதிப் போட்டேன். மதகடியில ஒக்காந்து ரேடியோ கேப்போம். நம்ம பேர சொல்லும் போது சந்தோஷம். அப்புறம் பத்திரிக்கைகளுக்கு எழுதிப் போட ஆரம்பிச்சேன். அதற்காக படிக்க ஆரம்பித்தேன். லைப்ரரியில் இருப்பதை எல்லாம் படித்தேன்."

                           

"கலைஞர் குறளோவியம் எழுதிகிட்டிருந்தார். மிசா அமல்படுத்தப்பட்டது. பின்னொரு சந்தர்ப்பத்தில் குறளோவியம் தொடருமா என்று கலைஞரிடத்தில் கேட்ட போது, நெருக்கடி நிலையால் எழுதியவைகளும் குறிப்புகளும் தொலைந்து விட்டது, கிடைத்தால் தொடர்வேன் என்று சொல்லியிருந்தார்.

நான் பத்திரிக்கையில் வந்த குறளோவியத்தை சேர்த்து வைத்திருந்தேன். அதை கொண்டு போய் கொடுத்தேன். கலைஞர் என்னை உட்கார வைத்து, காபி கொடுத்து, நன்றி சொல்லி பெற்றுக் கொண்டார். குறளோவியம் தொடர்ந்தார்" என அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

விழா நிறைவாக அவருக்கு புத்தகம் பரிசளித்தார்கள். இன்னொரு பரிசு சிறப்பானது. வந்திருந்தவர்களுக்கு அவரது முகவரியிட்ட அஞ்சல் அட்டை வழங்கினார்கள். வாசகர் கடிதம் எழுதுபவருக்கு, வாழ்த்துக் கடிதம் எழுத. முதல் கார்டை நான் வாங்கினேன். கடிதம் எழுதி விட்டேன்.

" அன்புள்ள சத்தியநாராயணன் சார் அவர்களுக்கு, வணக்கம் !
வாசகர் கடிதம் எழுதியே வாசகர்கள் சேர்த்திருக்கிறீர்கள் என்பது அன்றைய விழாவில் நிரூபணம்.
உங்கள் பேரை கேட்டு, படித்து வளர்ந்த தலைமுறையை சேர்ந்தவன் என்ற முறையில் நிகழ்வில் பங்கேற்றேன்.
உங்கள் பதில்கள் "ஷார்ப்".
உங்கள் கடிதங்களாலும், கேள்விகளாலும் பத்திரிக்கைகளும் தொடர்ந்து "ஷார்ப்" ஆகட்டும்.
தங்கள் வாசகன், சிவசங்கர்"

# பாராட்டிக் கடிதம் எழுதி, பாராட்டும் பணி செய்பவரை பாராட்டி மகிழ்வோமே !
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக