பிரபலமான இடுகைகள்

புதன், 18 டிசம்பர், 2013

நிகழ்கையில் சாரல், நினைக்க நினைக்கத்தான் மழை !

ஒரு கார் வந்து நின்றது. யார் இறங்குகிறார்கள் என்று பார்ப்பதில் எங்கள் பேச்சு தடைபட்டது. அது சேலம். அண்ணன் ஈசன் இளங்கோ அவர்களின் ஷோரூம். வந்தவர் தமிழ் இலக்கிய உலகின் ஆளுமை.

எங்களுக்கு ஆச்சரியம். வரவேற்றோம். எனக்கு அறிமுகம் கிடையாது என்பதால், இளங்கோ என்னை அறிமுகப்படுத்தினார். அரசியல்வாதி என்று தெரிந்த உடன் அவரிடத்தில் சிறு தயக்கம். நான் மேலே ஓய்வுக்கு செல்கிறேன் என்று சென்று விட்டார்.

அவர் ஆழ்ந்த தமிழ் பற்றாளர். கவியுலகில் நீண்ட அனுபவம். திரையுலகிலும் பங்கு உண்டு. ஆனால் வர்த்தகத்திற்கு இரையாகாதவர். சிறுகதை, கட்டுரைகள் என தொடர்ந்து பத்திரிகைகளில் பிரகாசிப்பவர். தீவிர ஈழ உணர்வாளர். எங்களுக்கு பக்கத்து ஊர்காரர்.

அவரிடம் விடை பெறலாம் என்று மாடிக்கு சென்றேன். கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். "உங்களைப் பற்றி இப்போது தான் சொல்லிக் கொண்டிருந்தார்" என்று உடன் வந்திருந்த தோழரைக் காட்டினார்.

எங்களையும் அமர சொன்னார். பேச்சு வளர்ந்தது. நான் நக்கீரனில் எழுதிய சட்டமன்ற விமர்சனத்தைக் காட்டினேன், மகிழ்ந்தார். "இன்னும் எழுதலாமே" என்றார். நான் முகநூல் பதிவுகள் சிலவற்றைக் காட்டினேன். "அட, அவ்வளவு தான். லேசாக மாற்றி எழுதினால், சிறுகதை" வாழ்த்தினார். சில இடங்களை சுட்டி, ஒற்றுப் பிழைகளை தவிர்க்கச் சொன்னார்.

தன்னுடைய கேமராவைக் காட்டினார். கிராமத்து வீடு ஒன்றில் இருந்த மண்ணாலான நெல் குதிர் ஒன்றை படம் எடுத்திருந்தார். "இது அருகி விட்டது. இவற்றை நாம் பதிவு செய்ய வேண்டும். இந்த படங்களை எடுப்பதற்காகவே, இன்றைய எனது பயணம் இரண்டு மணி நேரம் நீண்டது"

"நீங்கள் கிராமங்களில் அதிகம் பயணம் செய்கிறவர். இது போன்றவற்றை படம் எடுத்து, முகநூலில் பதிய வேண்டும்" என்றார். நான் என் கேமராவைக் காட்டினேன். மலையேறும் போது எடுத்த ஆலம்பழம், ஆவாரம்பூ, விளக்குத்தூண் படங்களைக் காட்டினேன். உற்சாகமாகி விட்டார்.





உட்கார வைத்து, தான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு இலக்கியப் பொழிப்புரையை படித்துக் காட்டினார். பழம் இலக்கியத் தொடர்பானது. அதில் இன உணர்வு பொதிந்திருப்பதை கேட்டு மகிழ்ந்தோம். அதை நான் உணர்ந்தேன் என்பது அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி.

அடுத்தப் பகுதியைப் படித்தார். சங்ககாலத்தில், பறை அறைந்து "அனைத்து" தமிழர்களும் மகிழ்ந்ததை எழுதியிருந்தார். தேர்தல் பிரச்சாரத்தில் நான் பறை அடித்தப் புகைப்படத்தைக் காட்டினேன். மகிழ்ச்சியானார். அனைத்து விதத்திலும் அவர் உணர்வை ஒட்டி வருவதாக நினைத்திருப்பார் போலும். முதலில் பார்த்தத் தயக்கம் இப்போது முற்றிலும் விலகியிருந்தது.

கேமரவை கையில் எடுத்தார். அறைக்கு வெளியே அழைத்து வந்தவர், என்னை நிற்க வைத்துப் புகைப்படங்கள் எடுத்தார். இதில் சிறந்தவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். அருமையான புரொபைல் படங்கள்.

                               

அவ்வளவு பெரிய ஆளுமை குழந்தையாய் பழகினார். எனக்கு வாழ்நாள் மகிழ்ச்சி. சிறந்த இலக்கிய அனுபவம்.

அவர் அண்ணன் அறிவுமதி. அவருடனான சந்திப்பை சொல்ல, அவரது "மழைப் பேச்சு" தான் உதவிக்கு வருகிறது.

                                 

# நிகழ்கையில் சாரல், நினைக்க நினைக்கத்தான் மழை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக