பிரபலமான இடுகைகள்

புதன், 25 டிசம்பர், 2013

எம்ஜிஆரின் தாக்கம், பாதிப்பு எல்லா இடத்திலும்....

ஆட்டோவில் போகும் போது பார்த்தேன், சாலை ஓரத்தில் ஒரு நாற்காலி. நாற்காலி மேல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் படம். மாலை போடப்பட்டிருந்தது. நாற்காலி அருகே பிளாட்ஃபார்ம் மீது ஒரு பாட்டி அமர்ந்திருந்தார். கண்களில் லேசான கலக்கம். “விழியே கதை எழுது” கனவுப் பாடலாகக் கூட இருக்கலாம்.

                                                       

.........................................

1984 ஆம் ஆண்டு. கிராமங்கள் தோறும், எம்ஜிஆர் படம் வைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். சுற்றி தாய்மார்கள் சோகமாக அமர்ந்திருப்பார்கள். ஸ்பீக்கரில் “இறைவா, உன் கோவிலிலே எத்தனையோ மணி விளக்கு” பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

எம்ஜிஆர் அப்போது அமெரிக்காவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். சட்டமன்றத் தேர்தலும் வந்தது. இந்திராகாந்தியின் மரணமும், எம்ஜிஆரின் உடல் நலக்குறைவும் தேர்தலில் பிரதிபலித்தன. “சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு” கிராமத்து வழக்கில்.

பரவலாக திமுக வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். 1980 தேர்தலில், 600 வாக்கு வித்தியாசத்தில் எனது தந்தையார் தோல்வி அடைந்திருந்ததால், இந்த முறை வெற்றி உறுதி என நினைத்திருந்த நேரத்தில் தோல்வி.

இப்படி எம்ஜிஆரோடு அரசியல் பகை இருந்தாலும், கொள்கை மாறுபாடு இருந்தாலும், எம்ஜிஆர் படங்களை ரசித்தவன் தான். ஆனால் பள்ளியில் நண்பர்களோடு விவாதிக்கும் போது எம்.ஜி.ஆரை தீவிரமாக விமர்சித்தவன்.

1987. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன் நான். மூன்றாவது செமஸ்டர் முடிந்து விடுமுறை. நாட்டு நலப்பணித் திட்ட முகாமுக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து, ஹாஸ்டலுக்கு வந்து விட்டோம் நண்பர்கள். திடீரென ஊரே மயான அமைதி. எம்.ஜி.ஆர் மறைவுச் செய்தி.

நாடே ஸ்தம்பித்த்து. எங்கும் பயணிக்க முடியாத நிலை. உணவுப் பிரச்சினை. ரேடியோவை வைத்தால், டொய்ங், டொய்ங், சோக இசை. ஹாஸ்டலின் டீவி ரூமில் இருக்கும், டீவியை பார்த்து மரண நிகழ்வுகளை தெரிந்து கொண்டோம். தலைவர் கலைஞரின் இரங்கல் செய்தி வந்தது.

எம்ஜிஆர் இறுதி ஊர்வலத்தில், எல்.ஐ.சி அருகே இருந்த தலைவர் கலைஞர் அவர்களின் சிலை உடைக்கப்பட்டது. அது குறித்து மறுநாள் தலைவர் கருத்து, “அந்தத் தம்பி நெஞ்சில் தானே குத்தினார், முதுகில் குத்தவில்லையே”

.......................................

அந்தப் பாட்டியை பார்த்தவுடன், இப்படியான எம்.ஜி.ஆர் குறித்த நினைவுகள்.

என்னோடு பயணித்த ஏழு வயது மகன் கேட்டார்,”அப்பா எம்ஜிஆர் படம் தானே ?” தொப்பி, கண்ணாடி இல்லாத ராஜா காலத்து உடையில் எம்ஜிஆர் படம். “எப்படி தெரியும்பா?” “என்னாப்பா எம்ஜிஆர தெரியாதா?”

ஆட்டோ சிறிது தூரம் சென்றது. பெரிய ஜெயல்லிதா வரவேற்பு டிஜிட்டல் பேனர். கீழே ஏழு,எட்டு நபர்கள். அதிமுக நிர்வாகிகளாக இருக்கலாம். இப்போதே லேசாக வளைந்து தயாராக இருந்தார்கள். கொடநாடு போக ஜெ கார் வரப் போகுது போல. எம்ஜிஆர் காலத்தில் இந்தக் கூன் விழவில்லை, அதிமுகவினருக்கு.

# எம்ஜிஆரின் தாக்கம், பாதிப்பு எல்லா இடத்திலும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக