பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

ஏற்கனவே இளையராஜா ரசிகன் தான்...

ஏற்கனவே இளையராஜா ரசிகன் தான். எப்போது ராஜா பாடல்களை கேட்டாலும் இந்த இடத்தில் எந்த இசைக் கருவி பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று கணிக்க முயற்சிப்பது வாடிக்கை. சில நேரங்களில் கண்டுபிடிப்பது உண்டு. சில நேரங்களில் சிரமம்.

                                                                     

நடந்ததை நினைவுப்படுத்தி எழுதவே இவ்வளவு சிரமப்படுகிறோம். உருவகப்படுத்த முடியாத இசையை கற்பனையில் வடிப்பது நினைத்தாலே மயக்கம் வருகிறது. கற்பனை செய்யும் இசைக் கோர்வையை வடித்தெடுப்பது எவ்வளவு சிரமம்.

அதற்கு எப்படி இத்தனை இசைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து வேலை வாங்கியிருப்பார் என்ற பிரமிப்பு ஏற்படும். அவர் விரல் பட்டு ஒலிப்பது போலவே, ஒவ்வொரு இசைத் துளியும் நமக்கு கேட்பது பிரம்மை தானோ ?

கிராமிய இசையா, நவீன இசையா, அல்லது இரண்டையும் கலந்து கொடுப்பதா, இப்படி எதை எடுத்தாலும் முத்திரை தான். அதனால் தானே கலைஞரால் ,"இசைஞானி" என்று வாழ்த்தப்பட்டார்.

இப்படி ரசித்து, ரசித்து ஒரு கட்டத்தில் அவர் பாடல்கள் சுவாசமாகிவிட்டன. இது எனக்கு மட்டுமல்ல, லட்சக்கணக்கானோருக்கு ஏற்பட்ட நிலை. அவரது இசைக் கோர்ப்பை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு.

அதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற நிலையில், தற்போது ஜெயா டிவியில் ஒளிப்பரப்பாகும் , மலேசியாவில் நிகழ்த்தப்பட்ட கிங்க்ஸ் ஆப் கிங்க்ஸ் நிகழ்ச்சியின் பதிவு அந்தக் குறையை ஓரளவு தீர்க்கும் போலும்.

எவ்வளவு பெரிய ஆர்கெஸ்ட்ரா, எவ்வளவு இசைக் கலைஞர்கள், எத்தனை இசைக்கருவிகள். இத்தனையும் இன்றைய நவீன தொழில் நுடபத்தில் சாத்தியம். ஆனால் அந்தப் பாடல்கள் பதிவு செய்யப்பட்ட காலத்தில் எப்படி இது சாத்தியம் ?

நான் நினைத்ததை ஒருவர் இசைஞானியிடம் கேட்டே விட்டார். " நாங்கள் இன்னும் விவாதித்துக் கொண்டு இருக்கிறோம். அந்தப் பாடலில் எப்படி தபேலாவை இப்படி பயன்படுத்தினார் ? வளையோசை பாடலில் அந்த அழுத்தம் எப்படி ?"

"இதை எல்லாம் எப்படி யோசிச்சு போடுவீங்களா ?"

"யோசிச்சு போட்டா mental reflection தான் இருக்கும். யோசிக்காம போட்டா தான் flow இருக்கும்". "Raja never thinks". இது இசைஞானியின் பதில்.

அவ்வளவு தான், அவ்வளவு தான் பதில் சொல்ல முடியும்.

# ஏற்கனவே இளையராஜா ரசிகன் தான். இப்போ இன்னும் நுணுக்கமாய்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக