பிரபலமான இடுகைகள்

வியாழன், 18 செப்டம்பர், 2014

1928-லேயே அய்ரோப்பா பார்லிமெண்டில் பேசப்பட்டவர்...

“ திரு. நாயக்கரைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றி அய்ரோப்பாவிலே உள்ள பார்லிமெண்டில் பேசப்படுகிறது என்றால், நாயக்கரின் புகழைப் பற்றி நான் என்ன சொல்வது?

திரு. நாயக்கரிடத்திலுள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனதிற்குபடும் உண்மைகளை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தம குணந்தான். அவரை எனக்கு 20 வருடமாய் தெரியும்.

அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த  இயக்கத்தில் (காங்கிரஸ்) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்த பின், நானும் அவரும் விலகிவிட்டோம்.

பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பித்து நட்த்தப் பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து, இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால், நானும் என்னாலான உதவியை அவ்வியக்கத்திற்கு செய்து வருகிறேன்.

சுருங்கச் சொல்லின், நாயக்கரவர்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களையும் விடப் பெரிய தியாகி என்று தான் சொல்ல வேண்டும்.

மேலே குறிப்பிடப்படும் நாயக்கர் யார் என்று கண்டுபிடித்திருப்பீர்கள். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தான், நாயக்கர் என்று அன்னியோன்யமாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவ்வளவு அன்போடு குறிப்பிட்டவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் அவர்கள். இந்தக் கருத்தை வெளிப்படுத்திய ஆண்டு 1928.

1928-லேயே அய்ரோப்பாவில் உள்ள பார்லிமெண்டில் பிரிட்டிஷின் அடிமை தேசமான இந்தியாவின் ஒரு கடைகோடியில் இருக்கிற தமிழகத்தின் பிரமுகரைப் பற்றி பேசியிருக்கிறார்கள் என்றால் அவர் ஏற்படுத்திய அதிர்வு எத்தகையதாக இருந்திருக்கும்?

அது வரை காங்கிரஸ் இயக்கத்தில் பணியாற்றி வந்தவர், 1925 காஞ்சி காங்கிரஸ் மாநாட்டிலேயே “இனி காங்கிரஸை ஒழிப்பதே என் முதல் வேலை என்று முரசறிவித்து வெளியேறினார்.

பின் குடியரசு பத்திரிக்கையை துவங்கி சுயமரியாதைக் கொள்கையை வலியுறுத்தி எழுத ஆரம்பித்தார். வருணாசிரமக் கொள்கையை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார். இந்த ஆரம்பக் கட்ட்த்தில் தான் வ.உ.சி, பெரியாரை மேற்கண்டவாறு பாராட்டினார்.

1928-க்கு பிறகு பெரியார் ஆற்றிய பணி அளவிட இயலாதது. அவற்றை எல்லாம் படித்தால் தான் பெரியாரின் பெருமையை உணர முடியும். 1928-லேயே அய்ரோப்பா பார்லிமெண்டில் பேசப்பட்ட அவரது வரலாற்றை நாம் 2015-லாவது படித்திருக்க வேண்டும்.


# தந்தை பெரியார் 136-வது பிறந்தநாள் ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக