பிரபலமான இடுகைகள்

புதன், 8 அக்டோபர், 2014

தேத்தண்ணி, தேத்தாரை; மலேசியப் பயணம் - 3

மலேசியாவில் ஜோகுர். அம்மா உணவகம். 02.09.2014, காலை உணவு. உணவு ஆர்டர் கொடுத்து முடிந்தவுடன் உணவக சிப்பந்தி கேட்டார், "drinks என்ன சாப்பிடுறீங்க?"

ஒரு நிமிடம் புரியவில்லை, வெறும் உணவகம் தானே. பக்கத்திலிருந்த செல்வத்தை பார்த்தேன். அதற்குள் அலன் "தேத்தண்ணி" என்று சொல்லிவிட்டு எங்களை பார்த்தார். "டீ தான். சொல்லலாம்ல" என்றார் செல்வம்.

       

"சாப்பிட்டு முடிச்சிட்டு குடிக்கத்தானே?" என்று கேட்டேன். "இங்கு இப்படி தான். சாப்பிடும் போதே டீ குடிப்பார்கள்" என்றார். எல்லோருக்கும் தேத்தண்ணி சொன்னார். உணவு வந்தது. நல்ல ருசி. தேத்தண்ணி ஒரு பெரிய கிளாஸில் வந்தது.

அப்போது தான் நினைவுக்கு வந்தது. சென்னை வந்த மலேசியக் குழுவினருடன் மதிய உணவு அருந்திய போது, அவர்கள் மாதுளை ஜூஸ் ஆர்டர் செய்து உணவுடனே சாப்பிட்டது. அவர்கள் தண்ணீரே அருந்தவில்லை.

இங்கு மலேசியாவிலும் யாரும் தண்ணீர் அருந்தவில்லை. எல்லா மேசைகளிலும் தேத்தண்ணி. அரிதாக காஃப்பியும் இருந்தது. "போகும் இடமெல்லாம் இதே குரல் தான் கேட்கும்" என்றார் செல்வம். அதே போல் சென்ற இடங்களில் எல்லாம் தேத்தண்ணி கிடைத்தது.

அலன் அவர்கள் இல்லத்திற்கு சென்ற போது, "என்ன சாப்பிடறீங்க?" என்று கேட்ட போது, "தண்ணீர்" என்றேன். "தேத்தண்ணியா?" என்ற கேள்வி தான் வந்தது. அவர்களை பொறுத்தவரை தண்ணீரை குடிக்க பயன்படுத்தும் வழக்கம் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை.

அலன் அவர்களது தொழிற்சாலைக்கு சென்றிருந்த போது குடிக்க நீர் கேட்ட போதும், பிளாஸ்டிக் டம்ளரில் பேக் செய்யப்பட்ட நீரையே கொடுத்தார்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அருந்தும் முறையே கண்ணில் படவில்லை.

நம்மை போல் அதிகம் நீர் அருந்த வேண்டிய தட்பவெப்ப நிலை அவர்களுக்கு இல்லை. நானே, அங்கே இருந்த போது அதிகம் நீர் அருந்தவில்லை என்பதை இதையெல்லாம் கூர்ந்து கவனித்த போது தான் உணர்ந்தேன்.

காற்றில் ஈரப்பதம் சென்னையில் 70% என்றால் அங்கே 83% சதவீதத்திற்கு மேல். அவ்வப்போது மழை வந்து விடுகிறது.அதனால் தண்ணீர் அருந்தி உடல் வெப்பத்தை சீராக வைக்கும் தேவை இல்லை.

நாங்கள் சென்ற முதல் நாள் மழையை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களிடம் கேட்டேன், "மழை பெய்யுமா?". "என்ன இவ்வளவு ஆர்வம்?" என்று கேட்டார்கள்.

சமீபத்தில் கவியரசு வைரமுத்து பேட்டியில் சொல்லியிருந்தார்,"உலகிலேயே எனக்கு பிடித்த மழை மலேசிய மழை. அவ்வளவு தூய்மையானது" என்று. அதனால் தான் அந்த ஆர்வம். இரண்டாம் நாளே அந்த வாய்ப்பு கிடைத்தது. திடீரென பொத்துக் கொண்டு ஊற்ற ஆரம்பித்தது. ஒரு மணி நேரம். கன மழை. உட்கார்ந்து பார்த்து ரசித்தேன்.

அடடா, அந்த மழையை ரசிக்க தேத்தண்ணி அவசியம் தான். தேத்தண்ணியை போல் தேத்தாரே என்ற வார்த்தையும் புழங்கியது. என்ன என்றேன். நம்மூர் டீக்கடையில் சில டீமாஸ்டர்கள், டீயை உயரத் தூக்கி ஆற்றுவார்கள். அப்படி ஆற்றினால் தேத்தாரே. அதற்கு போட்டி வைத்து பரிசு கொடுப்பார்களாம், அதிக உயரம் டீ தூக்கி ஆற்றுகிறவருக்கு.

நம்மை போலவே டீ'கலாச்சாரம். கொடுக்கும் அளவு மிகக் கூடுதல். நம்மூர் ஆறு டீ அளவு.

# தேத்தண்ணி குடித்து வாழ்வோரே வாழ்வார் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக