பிரபலமான இடுகைகள்

திங்கள், 27 அக்டோபர், 2014

பெரம்பலூரை, “பெரும்” ஊராக்கியவர்...

அப்போது அடிக்கடி பெரம்பலூர் செல்கிற சந்தர்ப்பம் வந்தது, காரணம் பெரம்பலூர் மாவட்டத் தலைநகராகியது. திருச்சியிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டிருந்தது. அப்போதிலிருந்து பெரம்பலூரை கவனித்து வருகிறேன். மேப்பிலே ஒரு புள்ளியாக இருப்பது போல் தான் மற்றவர்களால் பார்க்கப்பட்டது.

               

1996-ல் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக தேர்வு பெற்ற பிறகு வாரம் இரு முறை செல்லக் கூடிய சூழல் ஏற்பட்டது. அரியலூரிலிருந்து பெரம்பலூர் செல்லும் சாலையே கிராமச் சாலை போலத் தான் இருக்கும்.

பெரம்பலூர் உள்ளே நான்கு ரோடு வழியாக நுழைந்தாலும், துறைமங்கலம் வழியாக நுழைந்தாலும் கிராமத்திற்கான அடையாளத் தோடு தான் இருக்கும். அப்போது ஒரு மாவட்ட தலைநகருக்கான தோற்றத்தோடு விளங்காது.

பாலக்கரையில் இருந்து பழையப் பேருந்து நிலையம் செல்வதற்குள் டிராபிக் படுத்தி விடும். நெருக்கடியான சாலை. ஆக்கிரமிப்புகள். பழையப் பேருந்து நிலையத்திற்குள் போய் வெளியே வருவது என்பது சர்க்கஸ் போன்றது. பேருந்துகள் நெருக்கியடித்துக் கொண்டு நகரும்.

அப்போது சாப்பிடுவதற்கு கூட சுந்தரம் மெஸ் தான் சொல்லிக் கொள்வது போல இருக்கும். ரோவர் பள்ளி ஒரு அடையாளம். பெரிய அளவில் வியாபாரங்கள் இருந்தாலும் ஊர் வளர்ச்சி அடைந்தது போல் தெரியாது.

1996-ல் அண்ணன் ஆ.ராசா எம்.பியாக வெற்றி பெற்று ஒரு வருடத்தில் மத்திய அரசு கவிழ்ந்து மீண்டும் தேர்தல். வெற்றி வாய்ப்பு நழுவியது. 1999-ல் மீண்டும் வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சரானார்.

2004-ல் வெற்றி பெற்று மத்திய கேபினட் அமைச்சரானார். 2006-ல் கழகம் வெற்றி பெற்று தலைவர் கலைஞர் முதல்வரானார். அவ்வளவு தான் பெரம்பலூரின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தை மிஞ்சியது.

திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டார் அண்ணன் ராசா. பத்து வருடம் கழித்து யாராவது பெரம்பலூருக்குள் இப்போது வந்தால் அந்த வளர்ச்சியை உணர்வார்கள். நகருக்குள் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு நகருக்கான தோற்றம் ஏற்படுத்தப்பட்டது.

துறையூர் சாலையில் அரசு கலைக் கல்லூரி, சென்னை சாலையில் ஐ.டி.ஐ, செட்டிக்குளம் சாலையில் பாலிடெக்னிக், ஆத்தூர் சாலையில் பருத்தி ஆராய்ச்சி நிலையம், திருச்சி சாலையில் எம்.ஆர்.எஃப் டயர் தொழிற்சாலை என அமைக்கப்பட்டதால் பரவலான, சீரான வளர்ச்சி.

அவர் பெற்று தந்த அரசு மருத்துவக்கல்லூரியும் ஜெயலலிதா அரசால் தடுக்கப்படாமல் இருந்திருந்தால் அரியலூர் சாலையில் குன்னம் அருகே அமைந்திருக்கும்.

இதன் தொடர்ச்சியாக தனியார் கல்லூரிகள் பெரம்பலூரை சுற்றி அமைந்தன. கணக்கற்ற ஹோட்டல்கள் தரமாக அமைந்துவிட்டன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறவர்கள் கூட பெரம்பலூருக்குள் நுழைந்து சாப்பிட்டுவிட்டு செல்கிற அளவுக்கு வளர்ச்சி.

பெரம்பலூர்-தஞ்சை சாலையை அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களிடம் பரிந்துரைத்து தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி சாலை அகலப்படுத்தப்பட்டு விட்டது.

தலைவர் கலைஞரிடத்திலும், தளபதி அவர்களிடத்திலும் அவர் பெற்றிருந்த அன்பு பெரம்பலூரின் வளர்ச்சியில் பிரதிபலித்தது.

இந்த வளர்ச்சியின் காரணகர்த்தா அண்ணன் ஆ.ராசா அவர்கள் தான். வழக்கமாக வரலாறுகள் தான் தலைவர்களால் படைக்கப்படும். இங்கு இவரால் வரலாற்றோடு பூகோளமும் சீராக உருவாக்கப்பட்டுள்ளது.

(அரியலூருக்கு செய்த சாதனைகளை இன்னொரு சந்தர்ப்பத்தில் பதிகிறேன்)

அண்ணன் ஆ.ராசா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

# பெரம்பலூரை, “பெரும்” ஊராக்கியவர் வாழ்க !

                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக