பிரபலமான இடுகைகள்

திங்கள், 17 நவம்பர், 2014

போன் வந்தப்ப நம்பர பாத்தீங்களா ?

“வணக்கம். நான் மு.க.ஸ்டாலின் பேசறேன்”
“வணக்கம். நான் கலைஞர் பேசறேன்”


.
.
“நீங்க கருணாநிதி தானே?”
“ஆமாங்க”
“ஆலத்தூர் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தானே?”
“ஆமாங்க”
.
.
“நான் அறிவாலயத்திலிருந்து ஸ்டாலின் பேசறேன்”
“ஏங்க, ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் அவரு, பெரம்பலூர் வந்து என்னைப் பாத்துட்டு போனாரு. நீங்க யாருங்க?”
“ஸ்டாலின் தான் பேசறேங்க”
“நான் அவருக்கே தலைவர் கலைஞர்ங்க”
(இவர் பெயர் கருணாநிதி என்பதால், நாங்கள் பெயர் சொல்லி அழைக்க தயங்கி, அவரை “கலைஞர்” என்று அழைப்போம். அதில் அவர் கலைஞராகவே ஆகிவிட்டார்)
“உங்களுக்கு நான் எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல”
“திமுக-காரனுக்கு யாரும் புரிய வைக்க வேண்டாங்க. நல்லா புரியும்”
“போன் வந்தப்ப நம்பர பாத்தீங்களா?”
“ஆமாம். Private Number-னு வந்தது”
(இப்போ தான் நம்ம ஆளுக்கு லேசா புரிய ஆரம்பிச்சுது, குரல் தளபதி மாதிரி தான் இருக்குன்னு)
“அய்யா, அய்யா நான் பிரைவேட் நம்பர்ன உடனே வெளிநாட்டு கால்னு நினைச்சேன்”
“எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் அய்யா”
“ஆய்வுக்கு வந்தீங்களே. எப்படி இருந்தது?”
“உங்கள பார்த்ததும், உங்கக்கிட்ட பேசினதும் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் அய்யா. தெரியாம பேசிட்டேன் அய்யா”
“பரவாயில்ல. ஊருக்கு வரும் போது பார்க்கிறேன், தலைவராச்சே”
சிரிப்போடு முடித்திருக்கிறார் தளபதி அவர்கள்.

***********************************

பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் காட்டுராஜா ஒரு நிகழ்ச்சியில் இருந்திருக்கிறார். அதே போல் அழைப்பு
“வணக்கம். நான் ஸ்டாலின் பேசறேன்”
(நம்பமுடியாமல்) “யாருங்க?”
“சென்னையிலிருந்து மு.க.ஸ்டாலின் பேசறேன்”

*************************************

இப்படியே பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இருந்து கிளைக்கழக ஆய்வில் கலந்து கொண்ட நூற்று அய்ம்பதும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் அலைபேசியில் அழைத்து பேசியிருக்கிறார் தளபதி அவர்கள். தளபதியோடு பேசிய மகிழ்ச்சியை எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள் தோழர்கள்.
.
மூன்றாம் நாள் எனக்கும் அழைப்பு
“சங்கர், எங்க இருக்கீங்க?”
“அரியலூர்லங்க அண்ணன்”
“ஊர்ல என்ன விசேஷம்?”
“நீங்க எல்லோருக்கும் பேசினது தாங்க அண்ணா விசேஷம். எல்லோருக்கும் மகிழ்ச்சி, நீங்க அழைச்சு பேசியது”

************************************

அண்ணன் ஆ.ராசா தளபதியை சந்தித்திருக்கிறார்கள்.
“உங்க ஊர்காரங்க அவ்வளவு ஈசியா நம்ப மாட்டேங்கிறாங்க. நான் பேசறேன்னு உறுதிபடுத்திக்கிட்டு தான் பேசறாங்க” சிரிப்போடு தளபதி சொல்லி இருக்கிறார்கள்.

**********************************

ஆலத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கருணாநிதியும், காட்டுராஜாவும் தளபதியை சந்தித்தார்கள்.

“அய்யா, தெரியாம நடந்துடுச்சி. இவங்க குடும்பமே கழகக் குடுமபம். இவர் பெயர் தலைவர் பெயர் (கருணாநிதி). இவர் தம்பி பெயர் பேராசிரியர் பெயர் (அன்பழகன்). அடுத்த தம்பி பெயர் உங்கள் பெயர் (ஸ்டாலின்). இவர் தம்பிகள், நண்பர்கள் வெளி நாட்டில இருக்காங்க. அங்கிருந்து அழைக்கும் போது சமயத்தில் “பிரைவேட் நம்பர்”னு வரும். யாரோ விளையாடறாங்கன்னு நினைச்சு பேசிட்டாரு”
.
“பரவாயில்ல. இது சகஜம் தான்” என்ற தளபதி அவர்கள் அருகில் இருந்த அமைப்பு செயலாளர் அண்ணன் ஆர்.எஸ்.பாரதி அவர்களிடம் இவரைக் காட்டி “இவரு தான் ஃபோன்ல எங்கிட்ட சண்டை போட்டவர்” என்று சிரிக்க, பயத்தோடு போனவர்கள் மகிழ்வோடு திரும்பினார்கள்.

# தொண்டர்களின் தோழன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக