பிரபலமான இடுகைகள்

சனி, 24 ஜனவரி, 2015

சிங்கப்பூர் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே...

“சிங்கப்பூர் போனியே, எப்புடியிருந்தது ?”
         

“சொல்லனுமா?. 1978-லேயே “அக்கரை சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே, புதுமையிலே மயங்குகிறேன்”ன்னு பாட வச்ச ஊராச்சே. இப்போ இன்னும் புதுமையாயிருக்கு”.

“எங்கெல்லாம் சுத்தி பார்த்தீங்க?”

“தங்கியிருந்த கல்லூரி நண்பன் முகில்வண்னன் வீட்டிலேர்ந்து ‘தேக்கா’ போனேன். தேக்காவிலிருந்து விமான நிலையம் வந்தேன். தேக்காவுல இருந்து, கல்லூரி நண்பர்களான மூர்த்தி, கலைவாணன் வீட்டுக்கு போனேன்.”

“என்ன சுத்தி பார்த்தீங்க?”

“தேக்காவ சுத்தி பார்த்தேன்”

“தேக்கான்னா தமிழர்கள் கூடுவாங்கன்னு சொல்லுவாங்களே, அந்த இடமா?, அவ்வளவு பெரிய ஏரியாவா?”

“சின்னப் பகுதி தான். அங்க தான் தமிழர்கள் பொருட்கள் வாங்க, சாப்பிட, நண்பர்களை சந்திக்க கூடுறாங்க. அதனால் நண்பர்களை சந்திப்பதற்காக தேக்கா போனேன். தேக்காவையே சுத்தி வந்தேன்”

“மலேசியாவில் சின்ன டீக்கடையில் கூட இலவச வைஃபை உண்டு. அதே போல சிங்கப்பூரில் இருக்கும்னு நினைச்சு போயிட்டேன். இங்க தொட்டதெல்லாம் காசு. மிக சில இடங்களில் மட்டுமே இலவச வைஃபை.

அதனால ஃபேஸ்புக்ல ஸ்டேடஸ் போட முடியாம நண்பர் மொபைல்லேர்ந்து சிங்கை இணையதள செயல்பாட்டாளார் நரசிம்மன் நரேஷ புடிச்சேன். அவர ஸ்டேடஸ் போட சொல்லி சொன்னேன். எங்க சந்திக்கலாம்னு கேட்டேன். ‘காந்தி உணவகம்’ வந்துடுங்க-ன்னார். போனேன்.

அவ்வளவு தான், தேக்காவுல தமிழ் நண்பர்கள் கூடுற எல்லாக் கடையையும் பார்த்துட்டேன். நரசிம்மன் வரும் போது காந்தி உணவகம் திறக்கல. சரின்னு பக்கத்துல செட்டிநாடு ஹோட்டல்ல உட்கார்ந்து டீ சாப்பிட்டோம். சிங்கை சிங்கங்கள் தங்கள் வேலையை காட்டினாங்க.



ஆமாம், சால்வையை எடுத்து போட்டாங்க. வேணாம்னு சொல்லிப் பார்த்தேன் கேட்கல. அப்பவே கடைகாரர் ஒரு மாதிரியா பார்த்தாரு. ஆளுக்கு ஒரு டீ சாப்பிட்டோம். கொஞ்சம் நேரம் போச்சு. ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாங்க. கலந்துரையாடல் போயிகிட்டு இருந்தது.


கூட்டம் பெருசா ஆக ஆரம்பிச்சு, சேர எல்லாம் நம்ம ஆட்கள் ஆக்கிரமிக்க ஆரம்பிச்ச உடனே, கடைகாரர் வந்து “அப்புறம்ணே?” அப்படின்னாரு. நரசிம்மனை பார்த்தேன். கிளம்பலாம்னாரு. ஜமாவை அடுத்த ரோட்டில் இருந்த ஹோட்டல் காயத்ரிக்கு மாற்றினோம்.

அது கொஞ்சம் உயர்-நடுத்தர ரெஸ்டாரண்ட். நாங்க உள்ள போகாம வெளியில் வராண்டாவில் இருந்த சேர்களை கைப்பற்றினோம். இங்கேயும் புதிதாக வந்த நண்பர்கள் சால்வை போட, இங்கிருந்த வேற்று நாட்டவர்கள் வித்தியாசமாக பார்த்தனர்.


இணையத்தில் செயல்படும் கழக உடன்பிறப்புகளான சிங்கை சிங்கங்கள், தொகுதியை சேர்ந்தவர்கள் என குழுமியிருந்தனர். "சிங்கப்பூர் வந்ததை நண்பர்களுக்கு தெரிவிக்க முடியவில்லை. ஸ்டேடஸ் போட்டாலாவது தெரியும். வைஃபை கிடைக்கல" என்றேன்.

பொன்னையா சார்லஸூம், அருள் செல்வராஜூம் தங்கள் மொபைலிலிருந்து ஹாட்ஸ்பாட் போட்டு தர, புகைப்படத்தோடு ஸ்டேடஸ் போட்டேன். அப்போ தான் சுவாசம் கிடைத்தது போல் இருந்தது. ஹோட்டல் முன்பாக நடந்து போய் கொண்டிருந்த, ஒருவர் ஒரு நிமிடம் நின்று உற்று பார்த்தார்…(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக