பிரபலமான இடுகைகள்

சனி, 14 பிப்ரவரி, 2015

தெளித்தாற் போல் தேன் வரும்

 தும்பை செடி முன்பெல்லாம் எங்கும் காணப்படும். வயல்வெளிகளில், சாலை ஓரங்களில் என நீக்கமற நிறைந்திருக்கும். இப்போது எங்கள் பகுதியில் அரிதாகி விட்டது.

      

திருவரங்கம் இடைத்தேர்தல் போது, மணப்பாறை பகுதியில் தும்பையை கண்ட போது மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. பால்ய நினைவுகள் வந்து விட்டன. ஓடி சென்று பறித்தேன்.

இதற்கே மணப்பாறை பகுதி கடும் வறட்சியான பகுதி. நிலத்தடி நீர் குறைவு. இதனால் விவசாயம் செய்யப்படும் வயல்கள் மிகக்குறைவு. பெரும்பாலும் கூலி வேலைக்கு நகரத்திற்கு செல்கிறார்கள்.

பெரும் நிலப்பரப்பு காய்ந்தே கிடக்கின்றன. ஒரு போகம் விவசாயம், வானம் பொய்க்காவிட்டால் இருக்கும். இப்படிப்பட்ட பகுதியில் எங்கு பார்த்தாலும் கருவேலம் மரம் தழைத்திருக்கிறது.

அதே போல மற்ற பகுதிகளில் அருகிவிட்ட கிளுவை முள், சூறை செடி, சப்பாத்திக் கள்ளி, எருக்கை போன்றவை இங்கு இன்னும் இருக்கின்றன. பூச்சி மருந்துகள் இங்கு பயன்படுத்தப்படாததால், இவை தப்பியிருக்கின்றன போலும்.

அதே போல் புற்கள் நன்றாக வளர்ந்திருக்கின்றன. இதனால் தான் இந்தப் பகுதியில் பால்வளம் மிகுந்திருக்கிறது என நினைக்கிறேன். மொத்தத்தில் இயற்கை சீரழிக்கப்படாமல் இருக்கிறது.

மீண்டும் தும்பைக்கு போவோம். தும்பை சிறு வயது தோழன். அப்போதைய பொழுதுபோக்குகளில் ஒன்று பட்டாம்பூச்சி, தட்டான் பிடிப்பது. அவற்றை பிடிப்பதற்கு தும்பை செடியை தான் பிடுங்கிக் கொண்டு துரத்துவோம்.

அப்புறம் தும்பைப் பூவில் இருக்கும் தேன், சிறு பிராயத்தில் மனம் கவர்ந்தது. அரை அடி உயரத்திற்கு தும்பை செடி சுற்றி தழைத்து வளர்ந்திருக்கும். அதன் மேல் வெண் நிற போர்வையை போர்த்தது போன்று பூ பூத்திருக்கும். வெண்மைக்கு சான்று கொடுக்க, “தும்பைப் பூ” போல என்ற வாக்கியம் பயன்படுத்தப்படும்.

பச்சை நிறத்தில் கோள வடிவில் இருக்கும் அமைப்பில் செருகியது போல தும்பை பூ இருக்கும். பூ இறகு போன்ற வடிவில் இருக்கும். அதை மெல்ல உருவி, அடிப் பாகத்தை வாயில் வைத்து உறிஞ்சினால், லேசாக நாக்கு நுனியில் தெளித்தாற் போல் தேன் வரும்.

       

மிகச் சிறு அளவு தான். ஆனால் அந்தத் தேனை ருசிப்பது ஒரு தனி ரசனை அந்த வயதில். அந்த ஞாபகத்தில் அன்றும் தும்பைத் தேனை ருசித்தேன்.

# தும்பை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே !

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக