பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 12 மே, 2015

கண்களில் துளிர்த்திருந்த நீர்துளிகள்

இடப்புறம் அமர்ந்திருந்தவரை கவனித்தேன். கை கன்னத்தில் இருந்தது. கையில் கைக்குட்டை இருந்தது. கவனிக்க முடியாத தருணத்தில் கைக்குட்டை கன்னத்தை ஒற்றியது.

          

வலப்புறம் மெல்லத் திரும்பினேன். அங்கிருந்தவரின் முகவாயை கை தாங்கியிருந்தது. விரல்கள் கன்னத்தில் இருந்தன. விரல்கள் மாத்திரம் மேலும் கீழுமாய் அசைந்தன.

மகன் வீசிய பந்தைப் பிடிக்க கமல் தடுமாறினார், அவ்வளவு வேகம், அவ்வளவு விசை. திருப்பி கமல் வீசிய பந்தை மகன் எளிதாய் பிடித்தார்.

மகன் வீசியப் பந்து அவருக்கு கமல் மீதான கோபத்தையும், கமல் வீசியப் பந்து அவருக்கு மகன் மீதான அன்பையும் வெளிப்படுத்தியது.

உத்தம வில்லன்.

வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் ஒரு மனிதன், அதனை தன் குடும்பத்தினரிடம் வெளிப்படுத்த திணறும் அந்தக் காட்சிகள் நம்மை திண்றடிக்கின்றன.

தன் மீது கடும் வெறுப்பில் இருக்கும் மகனிடம் தன் நிலையை பக்குவமாக சொல்ல, கமல் கையாளும் முறை ஒரு நிமிடம் கலங்க வைத்து விடுகிறது .

தந்தை சொல்ல வந்ததை புரிந்து, தந்தையின் நிலை உணர்ந்து மகன் வெடிக்க, சமாதானப்படுத்தும் விதமாக அவனது தலையை தன் கை இடுக்கில் அழுத்தி, அணைத்து கமல் தடுமாற...

நடிகரான கமலின் ரசிகர்கள், தடுப்புக்கு அந்தப்பக்கம் நின்று, அவர் நிலைமை தெரியாமல், மகிழ்ச்சிக் குரல் எழுப்ப, அவர்களையும் தவிர்த்து, மகனையும் சமாதானப்படுத்தி...

அந்த இடத்தில் கமலின் நடிப்பும், துடிப்பும், வசன உச்சரிப்பும். ம்.

இந்தக் காட்சிகளில் இயக்குநர் ரமேஷ் அரவிந்தையே, கமல் தான் இயக்கியிருப்பார் எனத் தோன்றுகிறது, தனது நடிப்பால்.

நமது வில்லுப்பாட்டையும், மலையாளக் கலையான தையத்தையும் குழைத்து தந்ததையும், இயக்குநர் பாலச்சந்தரை நடிக்க வைத்ததையும் , எடுக்கும் திரைப்படத்தையும் நிஜக் கதையையும் நறுக்காக தைத்து கொடுத்திருப்பதையும் குறிப்பிடலாம்.

ஆனால் அந்த ஒரு காட்சி மனதில் நிலைத்து விட்டது.

ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தாலும், கமல், கமல், கமல் தான். ஆனால் மற்றவர்களும் நிறைவாய் நடித்திருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

தீவிர திரை விமர்சகர்கள் கண்டித்தாலும், வரிசையாக துரித உணவு ரக திரைப்படங்களாக வந்துக் கொண்டிருக்கும் கால சூழ்நிலையில், தலைவாழை இலை போட்டு ஒரு "கமல் மீல்ஸ் ".

ஒன்றை சொல்ல விட்டுவிட்டேன். கமல் மகனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த அந்த நேரத்தில், என் கண்களில் துளிர்த்திருந்த நீர்துளிகளை யாரும் அறியாமல் அழித்ததாக நான் நினைத்தேன். ஆனால் என்னை போல் யாராவது என்னையும் கவனித்திருக்கக் கூடும்.

# உத்தம வில்ல கதாநாயக கமல்ஹாசன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக