பிரபலமான இடுகைகள்

வியாழன், 16 ஜூலை, 2015

கள்ளிக்காட்டு காதற் காற்றே !

எங்கள் கவி தேசத்தின் கருப்பு ராஜ குமாரனே. ஆம், நீ உடுத்தும் உடையும், நடக்கும் நடையும், மீசை முறுக்கும், பேச்சு நறுக்கும், ஊடுருவும் பார்வையும், தேனூறும்  வார்த்தையும்  உன்னை ஓர் ராஜகுமாரனாய் தான் நிலை நிறுத்திக் கொள்கிறாய்.

வடுகப்பட்டியில் கிளம்பும் போதே முடிவெடுத்துக் கொண்டாயா? பேயத் தேவரின் உடை சிக்கனத்தை உடைத்து, தனக்கென ஒரு தனி உடை அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதென. பால் உன் உடையோடு தன்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்வதாய் கேள்வி.

ரஜினி நடையை சிலாகித்து பாடல் எழுதுவாய், ஆனால் உன் நடையை நாங்கள் ரசிக்கிறோம். சிவாஜி நடைக்கும், ரஜினி நடைக்கும் மத்தியிலே இது ஒரு தனி ரகம். மனக் கேமராவில் ஓட விட்டு பார்த்து அடியை எடுத்து வைப்பாயோ.

போருக்கு கிளம்பும் வீரனைப் போல் முறுக்கிய மீசை. சின்ன சின்ன சிறு வயது ஆசையில் இது ஒன்றோ. தாவணிக்கு நல்ல தலைவனாய் காதல் மொழி உன் பேனாவில் ஊற்றெடுக்கையில் இது வித்தியாசமாய்  தான் இருக்கிறது.

மேடை ஏறிவிட்டால் உன் பேச்சு மகுடியாகி விடுகிறதே, எதிரே இருப்போரை மயக்கிப் போடுகிறதே. அழுத்தம் திருத்தமாய் நீ தமிழை உச்சரிக்கையில், அந்தத் தமிழே மெல்ல மயங்கித் தான் போய் விடும்.

ஊடுருவி, சிணுங்கி, சிரித்து, முறைத்து, கம்பீரம் காட்டி உன் பேச்சை ஒட்டி நடமிடுகிறதே உன் கண்கள். சினிமாவில் நடிக்கப் போயிருந்தால், உன் கண்களை காட்டியே ஒரு பாடலை முடித்திருப்பார் பாரதிராஜா.

ஒவ்வொரு வார்த்தையையும் எங்கிருந்து பிடிக்கிறாய்? கவிதையாகட்டும், பாடலாகட்டும், கட்டுரையாகட்டும், பேச்சாகட்டும் மது சுமந்து வருகிறதே உன் வார்த்தைகள். கேட்டவன் சொக்கித் தான் போகிறான்.

கவிஞன் என்றால் இப்படி எல்லாம் இருக்க முடியாது என்பதை மறுத்து,  திருத்தமாயும், மிடுக்காயும், முடுக்காயும், நறுக்காயும், நறுவிசாயும், நயமாயும் இருந்து காட்டுகிறாய். எல்லாவற்றிலும் வித்தியாசம் நீ.

கவிஞர்கள் பாடலாசிரியராய் பரிணமிப்பது சிரமம். பாடலாசிரியர் கட்டுரையாளராய் மிளிர்வது குறைவு. கட்டுரையாளர் நாவலாசிரியராய் வெல்வது அரிது. நாவலாசிரியர் பேச்சாளராய் முத்திரை பதிப்பது கடிது. நீ எல்லா பரிணாமமும் எடுக்கிறாய்.

# கள்ளிக்காட்டு காதற் காற்றே வாழ்க நீ !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக