பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 26 ஜூலை, 2015

ஒரு வழியா வெளியிட்டாச்சி, புத்தகம் தான்

நான் பாட்டுக்கு புத்தகம் ரிலீஸ் அப்படின்னு ஸ்டேடஸ் போட்டுட்டேன். ஆனா ரிலீஸ் ஆகறத்துக்குள்ள பட்டபாடு இருக்கே. இனி இந்த வேலையே வச்சிக்கக் கூடாது. புத்தகத்த கைல வச்சிக்கிட்டு தான் அறிவிக்கனும்.

முதல்நாளே, புத்தகங்கள் லாரியில் ஏறி விட்டது என்று உறுதிப்படுத்தி விட்டார்கள். லாரி ஷெட்டில் 12 மணிக்கு வந்துவிடும் என்றார்கள். அதனை நம்பி 10.52க்கு ஸ்டேடஸ் போட்டு விட்டேன் “ரிலீஸ்”.

மீண்டும் 12 மணிக்கு ஷெட்டில் கேட்டால் லாரி வரவில்லை என்றார்கள். 12.30க்கும் வரவில்லை. லாரி எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க சொல்லி, லூயி அவர்களோடு போராடிக் கொண்டிருந்தார்.

இதற்குள் அண்ணன் ஞானமூர்த்தி இல்ல நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள பெண்ணாடம் கிளம்பிவிட்டோம். இன்னாருக்கு, இன்ன விஷயத்திற்காக புத்தகங்கள் வருகின்றன என லூயி அவர்களிடம் விளக்கி மன்றாடினார்.

இதற்கிடையில் புத்தகத்தை வெளியிட, திருச்சியிலிருந்த பத்ரிசேஷாத்ரியை அழைக்க, அவரும் தன் பணிகளை ஒத்தி வைத்து 7.00 மணிக்கு கிளம்பி வர ஒப்புக் கொண்டார். அப்போது கேட்டார்,”சார், புத்தகம் வந்திடுச்சா?”. “இல்லிங்க சார். அது ஒரு சினிமா போல போய்கிட்டு இருக்கு” என்றேன். சிரித்து விட்டார்.

லாரி ஷெட்காரர்கள், லாரி உளுந்தூர்பேட்டையில் இருக்கிறது என்று கண்டுபிடித்து சொன்னார்கள். லாரி இதே போக்கில் வழியில் பார்சல்களை இறக்கிவிட்டு வந்தால் மாலை ஆகிவிடும். வெளியிடுவது சிரமம் ஆகிவிடும்.

முதல்நாளே வெளியிட துடிப்பதற்கு இரண்டு காரணங்கள். முதல் நாளே வெளியிட்டால் தான், அடுத்த இரண்டு மூன்று நாட்களில் பிரபலமாகி, புத்தகம் விற்பனையாகி, பதிப்பகத்திற்கு பலன்.

அடுத்து தள்ளிப் போகும் நாட்கள் பிரச்சினை. மறுநாள் 18, தளபதி கடலூர் நிகழ்ச்சி. அதற்கடுத்த நாள் மகனுக்கு பிறந்தநாள். அதற்கடுத்த நாள் வேறொரு பணி. 4 நாட்கள் ஓடி விடும். 21 தான் மீண்டும் வெளியிட வாய்ப்புள்ள நாள். அதனால் தான் இந்த பரபரப்பு.

நாங்களோ பெண்ணாடத்தில். செல்வத்தை ஒரு கார் எடுத்துக் கொண்டு லாரியை சேஸ் செய்ய சொன்னோம். செல்வம் கிளம்ப, அரியலூர் பைபாஸ் ரோட்டில் கார் தடுக்கப்படுகிறது காவல்துறையால். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பெரம்பலூரிலிருந்து கிளம்பி விட்டதால், எதிபுறம் நோ டிராபிக்.

பிறகு அனுமதிக்கப்பட்ட செல்வம் பெரம்பலூர், தொழுதூர் தாண்டி 70 கி,மீ தொலைவில் லாரியை மடக்கினார். அப்போது கிழக்கு பதிப்பகம் மேலாளர் போன் செய்தார்,”சார், எங்களுக்கு வர வேண்டிய புத்தகம் வரும் லாரி வந்து சேரவில்லை. உங்க புத்தகம் வந்துடுச்சா?”. “சார் லாரிய புடிச்சிட்டோம். பில் நம்பர் சொல்லுங்க சார்”.

செல்வம் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு அரியலூர் வந்தார். புத்தகத்தை ஸ்டாலுக்கு அனுப்பினோம். கலாம் இன்னொரு நிகழ்ச்சிசையை முடித்துக் கொண்டு அருகில் வந்துவிட்டார் என கதவுகளை பூட்டிவிட்டார்கள் காவல்துறையினர், பாதுகாப்புக் கருதி. புத்தகங்களை அனுமதிக்கவில்லை.

பிறகு நிகழ்ச்சிக்கு செல்லும் என் காரிலேயே ஏற்றிக் கொண்டு சென்றோம். கலாமும் வந்தார். புத்தகக் காட்சியை துவக்கி வைத்தார். இதற்குள் பத்ரி அவர்களை ஆசை.அன்பு அழைத்துக் கொண்டு திருச்சியிலிருந்து வர, டிராபிக் நெருக்கடி.

ஒரு வழியாக 08.30-க்கு புத்தகத்தை பத்ரிசேஷாத்ரி அவர்கள் வெளியிட்டார்கள். அவர் புத்தகத்தை வெளியிடும் கிழக்கு பதிப்பகத்தை சேர்ந்தவர் என்றாலும், எனது முகநூல் நண்பர். முகநூல் மூலம் என் எழுத்துக்களை முன்னமே வாசித்திருந்த காரணத்தால் தான், பதிப்பிக்க ஒப்புக் கொண்டார்.

பெற்றுக் கொண்டவர்கள் கவிஞர் அரங்கன்.தமிழ் மற்றும் எஸ்.பி.மகேந்திரன். இவர்கள் இருவரும் எனது முகநூல் நண்பர்கள். அரியலூரை சேர்ந்தவர்கள் என்றாலும் முகநூல் மூலமே அறிமுகமானவர்கள். தொடர்ந்து வாசித்து கருத்து சொல்பவர்கள். சூழ்ந்திருந்து வாழ்த்தியவர்களும் முகநூல் நண்பர்களே.

           

ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், அவைத்தலைவர் சந்திரசேகர், நகராட்சித்தலைவர் முருகேசன், பொதுக்குழு செல்வராஜ் ஆகியோர் ஸ்டேடஸ் பார்த்து வந்திருந்தார்கள், பார்வையாளர்களாக.

காலை ஸ்டேடசை பார்த்து தேனியிலிருந்து பறந்து வந்த சோமசுந்தரம் பத்ரி அவர்களுக்கு ஏலக்காய் மாலை அணிவிக்க, அவர் நெளிந்தார். சில பிரதிகளில் கையெழுத்திட்டு வழங்கி, எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றேன்.

முகநூலால் தான் எழுதும் எண்ணம் வந்தது, புத்தகம் வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் முழுதும் முகநூல் விழாவாகத் தான் இருக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.

விழாவாக வைத்திருந்தால், அரசியல் கலந்திருக்கும், பெரும் விழா ஆகியிருக்கும். எழுத்து பின்னுக்கு தள்ளப்பட்டு, ஆளுமை முன்னுக்கு வந்திருக்கும். எழுத்து, எழுத்துக்காக மாத்திரம் கொண்டாடப்பட வேண்டும் என்றே எளிய வெளியீடு.

# முதல் நூல் முகநூலால். நன்றி மார்க் மற்றும் “உங்களுக்கு” !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக