பிரபலமான இடுகைகள்

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

கண்ணதாசனே, கண்ணதாசனே ...

வழக்கறிஞர் கண்ணதாசன் அவர்களை நான் சந்தித்த இடமே வித்தியாசமானது. சென்னை மத்திய சிறைச்சாலை. 2001ல் சைதாப்பேட்டை இடைத்தேர்தலில் கைது செய்யப்பட்டு, நான் அங்கு இருந்தபோது.

பிறகு அறிவாலயத்தில் சந்திக்கும் வாய்ப்பு, தொலைக்காட்சி விவாதங்களில் காணும் வாய்ப்பு. கோர்ட், அறிவாலயம், தொலைக்காட்சி நிலையங்கள் என பரபரப்பாக இருப்பார்.

கடந்த வாரம், அரியலூர் வந்திருந்தார். கழகப் பணிக்காக. "மக்களோடு நான்" புத்தகத்தை புரட்டியவர், அதில் இடம் பெற்றிருந்த, "சிறு பொன்மணி" பாடல் குறித்த செய்தியை பார்த்தவர், என்னை பார்த்தார்.

அந்தப் பாடலை வரி விடாமல் சொன்னவர், அதன் சிறப்பு குறித்து சொன்னார். "திரைப்பாடல்களில் விருப்பம் உண்டா?" என்று கேட்டேன். "விருப்பம் மட்டுமல்ல ஆய்வே செய்திருக்கிறேன்" என்றார்.

"எப்பொழுது அண்ணா". "எம்.ஏ தமிழ் படிக்கும் போது" என்றவர் பழைய, புதிய பாடல்களை ஒப்பிட்டு பேசினார். கண்ணதாசன் பாடலையும், வைரமுத்து பாடலையும், தற்போதைய பாடலையும் வரி வரியாக சொல்லி, கலாச்சார மாறுபாடுகளை விவரித்தார். அங்கே, அங்கே கம்பன் சொன்னவற்றையும் மேற்கோள் காட்டினார்.

"அண்ணா, உங்களை இவ்வளவு நாள் வழக்கறிஞர் ஆகத்தான் அறிவேன். இப்போது தான் இன்னொரு முகத்தை அறிகிறேன். என்ன படிச்சிங்க?". "எம்.காம், எம்.ஏ (தமிழ்), எம்.ஏ (ஆங்கிலம்), எம்.ஏ( சமூகவியல்), பி.எட், மூன்று எம்.எல் டிகிரிகள்".

கொஞ்சம் தண்ணீர் குடித்தேன். "ஏண்ணே, கோர்ட், படிப்பு, தமிழ், கட்சி இதுவே நேரம் சரியா போயிடும் போல. பொழுதுபோக்கு ஏதாவது உண்டா?".

"என்ன தம்பி இப்படி கேட்டுட்டிங்க. மலையேற்றம் ரொம்ப பிடிக்கும்". ஊட்டி, கொடைக்கானல் போல நினைச்சிக்கிட்டு,"எந்த மலை அண்ணா?"என்று கேட்டேன்.

"முதல்ல ஆல்ப்ஸ் மலை ஏறினேன். அப்புறம் நேபாள். அப்புறம் இமயமலை. அது ஒரு தனி அனுபவம்". "எவ்வளவு நாள் அண்ணா?". "நாட் கணக்கு கிடையாது. வாரக் கணக்கு, மாதக் கணக்கு தான். சமயத்தில் கொஞ்சம் ரிஸ்க்காகவும் ஆயிடும்". விவரித்தார்.

காலைப் பணி முடிந்து, மாலைப் பணிக்கு இடையில் அவருக்கு வாட்ஸ் அப் அனுப்பினேன். அப்போது தான் அந்த டிபியை பார்த்தேன். புலியோடு அண்ணன் கண்ணதாசன். "இதுவும் ஹாபியா அண்ணா?"

"விலங்குகள்ல புலி எனக்கு புடிச்சது. சீனா போனப்ப எடுத்த போட்டோ இது". "வெளிநாடு போறதுக்கு டைம் எங்கண்ணே இருக்கு?". " 92 நாடுகள் போயிட்டேன் தம்பி. இன்னும் 8 போனா செண்டம்".

கழகப் பணி தொடர்ந்தது. இன்னும் விபரங்கள் கேட்க, நேரம் கிடைக்கவில்லை. இன்னொரு நாள் சந்திக்க வேண்டும்.

16 வயதில் கழக மாணவர் அணியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு சிறை அனுபவம். ஆசிரியர் பணி, ஒரு நாள் காவல்துறை உதவி ஆய்வாளர் பணி. வழக்கறிஞர் ஆன பிறகும் தொடர்ந்த படிப்பு. பல்வேறு துறைகளில் தொடரும் ஆர்வம். கழகப் பணி. என்ன ஒரு சுவாரஸ்யமான கேரக்டர்.

வாழ்க்கையை நாம் தான் வாழ வேண்டும், ரசனையாக. சொல்லாமல் சொல்லிவிட்டார்.

# கண்ணதாசனே, கண்ணதாசனே சொல்லிக் கொடு, வாழ்வினை ரசிக்க இன்னும் சொல்லிக் கொடு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக