பிரபலமான இடுகைகள்

புதன், 12 ஆகஸ்ட், 2015

சரோஜினி அம்மாள் வழி காட்டுகிறார்

திருமால் பத்து அவதாரம் எடுத்தார் என்றும் அதில் ஒன்பது அவதாரம் வடஇந்தியாவில் என்றும், ஒரு அவதாரம் மாத்திரமே தமிழகத்தில் என்பதும் வைணவர்களின் நம்பிக்கை. அந்த அவதாரம் "வராக அவதாரம்", எடுத்த இடம் "திருமுட்டம்", கடலூர் மாவட்டம்.

அந்த கடவுள் பூவராகசாமி. அவர் திருமுட்டத்தில் இருந்து 5 கி.மீ பயணித்து அரியலூர் மாவட்டம் கவரப்பாளையம் கிராமத்திற்கு வருவார். அங்கு அவருக்கு சிறப்பான பூஜை நடக்கும். ஊரே கூடி உறவினர் வந்தது போல கொண்டாடுவார்கள். இப்படி ஆத்திக ஊராக திகழ்வது கவரப்பாளையம்.

இந்த கிராமத்தை சேர்ந்தவர் இராமகிருஷ்ணன். சிறு வயதிலேயே பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். ஆனால் இவர் குடும்பம் தீவிர ஆத்திக குடும்பம். 1988ல் தனது தந்தை எத்திராஜுலு மறைந்த போது, சடங்குகள் இல்லாமலேயே இறுதி நிகழ்வுகள் முடித்தார்.

இவர் இணையராக ஏற்றுக் கொண்டவர் சரோஜினி. இவரது தந்தை பூராசாமி பகுத்தறிவாளர். ஆனால் சரோஜினிக்கு, அப்படி ஏதும் கொள்கை நாட்டம் என்று கிடையாது. ஆனால் கணவர் கொள்கைக்கு எதிராகவோ, ஆதரவாகவோ கருத்து தெரிவித்ததும் இல்லை.

இவர்கள் திருமணம் தமிழ் திருமணமாக நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள். சகோதரர்கள். பத்மநாபன் மற்றும் கோபால். கோபால் கொள்கை ரீதியாக என்னோடு தொடர்பில் இருப்பவர்.

கடந்த ஜூலை மாதம் சரோஜினி அம்மாள் உடல்நலக் குறைவால்  மறைவுற்றார். இறுதி நிகழ்வு. உறவினர்கள் திரண்டிருந்தனர். சடங்குகளை துவங்க அவர்கள் எத்தனிக்கும் போது தான் அந்த செய்தி.

மறைந்த சரோஜினி அம்மாள் தனது உடலை, உடல் தானம் செய்து இருக்கிறார். அம்மா மறைவுற்ற போது வயது 68. பகுத்தறிவு வாதம் பேசாமல், நெற்றியில் குங்குமம் துலங்க இருந்தவர், இறுதி முடிவை தெளிவாக, உறுதியாக பகுத்தறிந்து எடுத்திருந்தார்.

காரணம் 2003-வாக்கிலேயே குடும்பத்தோடு திராவிடர் கழக நிகழ்வுகளில் பங்கேற்க ஆரம்பித்தார். குற்றாலம் முகாமில் பங்கெடுத்து வந்தவர், மிகத் தெளிவாக விவாதிக்க ஆரம்பித்தார்.

ஆனால் உறவினர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. "அது எப்படி, அவரது உடலை அனாதை பிணமாக அனுப்புவது. இவ்வளவு உறவினர்கள் இருக்கிறோம், மரியாதையாக அடக்கம் செய்ய வேண்டும்".

கணவர் இராமகிருஷ்ணன், மகன்கள் அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என உறுதியாக இருந்தார்கள். திராவிடர் கழகத் தோழர்களும் ஆதரவாக கருத்து தெரிவிக்க, தோழர்களுக்கும் உறவினர்களுக்கும் கைகலப்பு வரை போய் விட்டது.

இறுதியில் சரோஜினி அம்மாள் உடல், அவர் விருப்பப்படி தானம் செய்யப்பட்டு பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டது.

அம்மையார் படத்திறப்பு நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா அவர்களோடு நானும் கலந்து கொண்டு, படத்தை திறந்து வைத்தேன். அப்போது தான் உறைத்தது, "நாம் என்ன செய்தோம்?". அங்கேயே அறிவித்தேன், "அம்மாவை வழிகாட்டியாக கொண்டு செயல்பட முயல்வேன்".

# சரோஜினி அம்மாள் வழிகாட்டி விட்டார். வழி நடப்போம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக