பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

வக்கில் பெரியதம்பி வீடு எங்கே ?

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஊர் முக்கியஸ்தர்கள் கூடி என்ன செய்யலாம் என்று பேசுகிறார்கள். பெரியதம்பியை ஊராட்சி மன்றத் தலைவர் ஆக்குவது என்று முடிவெடுக்கிறார்கள்.

பெரிய தம்பி, அவர் பெயர் அல்ல. ஆனால் ஊரே அப்படி தான் கூப்பிடும்.  அவர் அப்போது வழக்கறிஞர். அவர் வழக்கறிஞராக இருந்த நகரத்திற்கு போய், அவர் பெயர் தெரியாமல் "பெரியதம்பி வக்கீல்" வீடு எங்கே என்று தேடி நகரை அல்லோகலப் படுத்தியவர்களும் உண்டு.

கிராம நிர்வாக அலுவலர்களை  அப்போது கணக்கப்பிள்ளை என்று அழைப்பார்கள். அந்த ஊர் கணக்கப்பிள்ளையின் மூத்த மகன் தான், வீட்டில் பெரிய தம்பி என்று அழைக்கப்பட்டார். ஊரும் அப்படியே அழைத்துப் பழகி விட்டது.

கிராமத்தில் அப்போது அதிகம் படித்தவர் அவர் தான். அதனால் ஏதும் விபரம் தெரிய வேண்டும் என்றால் அவரிடம் கேட்பார்கள். அவரும் பொறுப்பாக பதில் சொல்வார். அதனால் அனைவரின் மனம் கவர்ந்தவர் ஆனார்.

வழக்கு என்றால் நேராக பெரிய தம்பியிடம் போய் விடுவார்கள். காரணம் அவரே கேஸை பார்த்துப்பார். அவர் வீட்டிலேயே தங்கிக்கிட்டு வந்திடலாம். செலவுக்கு வேணும்னாலும் வாங்கிக்கலாம்.

இப்படிப்பட்ட பெரிய தம்பி ஊராட்சி மன்ற தலைவர்னா  எல்லா விதத்திலும் சரியா இருக்கும்னு தான் அந்த முடிவு. அவர் வேட்பாளர்னா ஊர்ல போட்டியும் வராது. படிச்சவர் வந்தா நிர்வாகமும் சரியா இருக்கும்.

நகரத்துக்கு போய் பெரிய தம்பிகிட்ட பேசி, சம்மதிக்க வச்சாங்க. அவரையே நிக்க வச்சாங்க. ஊராட்சி மன்ற தலைவரா தேர்ந்தெடுத்தாங்க. இது 1965ல் நடைபெற்றது.

அந்த வட்டாரத்தில் அவர் தான் இளைய ஊராட்சி மன்ற தலைவர். அவர் தான் படித்தவர். அதனால் அந்தப் பகுதியை சேர்ந்த மற்ற ஊர்களை சேர்ந்த தலைவர்கள் அவரோடு இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார்கள்.

அடுத்த முறையும் அந்த கிராமம் அவரையே தலைவர் ஆக்கியது, 1970ல். இந்த முறை சுற்று வட்டாரத்தில் இருந்த மற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள் இணைந்து அவரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆக்கினார்கள்.

படிக்கும் காலத்தில் அரசியல் இயக்கத்தில் இணையாமல், பெரியார் பின்னால் சென்று கொண்டிருந்த அவர், இப்படி தான் பொதுவாழ்விற்கு வந்தார்.

அந்த கிராமம் தேவனூர். வக்கில் பெரிய தம்பியின் பெயர் எஸ்.சிவசுப்பிரமணியன் (எனது தந்தையார்). (10.09.2015) அன்று 78 வயது.

# தொடரும் பொதுவாழ்வு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக