பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

காப்பித்தூள் கணேசன்

கணேசன் அப்போது ஜெயங்கொண்டம் நகர கடைவீதி மட்டும்  அறிந்த நபர்.  காப்பித்தூள் வியாபாரம் செய்து வந்தார். அப்போது காப்பித்தூள் வியாபாரம் ஹாட் பிஸினஸ். அதற்காக தினம் பல ஊர்களுக்கு பயணம் செய்வார்.

அப்போது ஜெயங்கொண்டம் திருச்சி மாவட்டத்தில் அடங்கியது. ஜெயங்கொண்டத்தை மையமாகக் கொண்டு, திருச்சி, அருகில் இருந்த தஞ்சை, கடலூர் மாவட்ட பகுதிகளில் தொடர் பயணம். எங்கு சுற்றினாலும் தினம் வீடு திரும்பி விடுவார்.

சில வருடங்களுக்கு பிறகு இரவு தாமதமாக வர ஆரம்பித்தார். கொஞ்ச நாட்களில் சில நாட்கள் வீடு திரும்புவதில்லை. காரணம் புரியாமல் வீட்டில் திணற ஆரம்பித்தார்கள். அவரும் காரணம் சொல்லவில்லை.

போகும் ஊர்களில் திமுக கூட்டங்கள் நடந்தால், முதல் வரிசையில் இடம் பிடித்து விடுவார். கூட்டம் முடியும் வரையில் இருந்து கடைசியில் வருகிற நபர் அவராகத் தான் இருப்பார்.

இதனால் திமுக நிர்வாகிகள் மத்தியில் அறிமுகமாகி விட்டார். கொஞ்ச நாளில் பிரபலமும் ஆகிவிட்டார். "காப்பித்தூள் கணேசன்" என்ற பெயரில் இந்த சுற்று வட்டாரக் கழகத் தோழர்களுக்கு பாப்புலர்.

இப்போது வீட்டிலும் தெரிந்து விட்டது, திமுகக் கூட்டம் பார்ப்பதால் தான், ஒழுங்காக வீட்டுக்கு வருவதில்லை என. ஆரம்பத்தில் வருத்தப்பட்டவர்கள், பிறகு கழக நிகழ்ச்சிகளுக்கு தானே செல்கிறார் என விட்டு விட்டார்கள்.

அவ்வளவு தான், கணேசன் கிளம்பி விட்டார். அடுத்த 40 வருடம் அவர் வீடே தங்கவில்லை.

அவருக்கு உள் ஒளிந்திருந்த "பேச்சாளர்" மெல்ல உயிர் பெற ஆரம்பித்தார். பேச்சின் மீது இருந்த ஆர்வம் காரணமாகத் தான் கூட்டம் பார்க்க ஆரம்பித்தோம் என்பதை அவரே அறியவில்லை.

காப்பித்தூள் கணேசன் மேடை ஏறி பேச ஆரம்பித்தார். வழக்கமாக மற்றவர்கள் பேச்சு போல் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. ஒரு செய்தியை மற்ற பேச்சாளர்கள் பேசுவதற்கு நேர் எதிர் கோணத்தில் இவர் பேச்சு அமைந்தது.

புகழ் பெற ஆரம்பித்தார். ஒரே நாளில் நான்கு ஊர்களில் அவர் பெயர் போட்டு கூட்ட நோட்டீஸ்கள் அடித்து விட்டு, அவரை நிர்வாகிகள்  கடத்திச் செல்லும் அளவுக்கு புகழ் பெற்றார்.

மகன்களுக்கு உதயசூரியன், கருணாநிதி என்று பெயர் சூட்டினார். "எதிர்காலத்தில் கழகத்திற்கு எதிராக இவர்கள் போய்விடக் கூடாது என்பதற்காகவே, இப்படி பெயர் சூட்டினேன்" என ஒரு கூட்டத்தில் பேசினார். ஆனால் அவர்கள் கழக உணர்வில் ஊறிப் போனார்கள் அவரால்.

மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்கிறார், கொள்கை பற்றால். இன்று அவரது பிறந்தநாள்.

இடையில் தன் பெயரை ஊர் பெயரான "ஜெயங்கொண்டம்' நினைவோடு மாற்றிக் கொண்டார். அந்த பேர சொன்னா சும்மா அதிரும்ல...

#வெற்றிகொண்டான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக