பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 2 அக்டோபர், 2015

விடியல் மீட்பு நாயகன்

அவர் சற்றே உயரம். முடி கொட்டி போய் வழுக்கை வாங்கியிருந்தார்.  நல்ல சிவந்த நிறம். நீல நிற சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தார். அந்த இடத்தை விட்டு அசையவில்லை. இவர் ஏன் இங்கு நிற்கிறார் என்று எனக்கு சந்தேகம். காரணம், அவர் வேட்டி.

தளபதி - மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது, லேனா மண்டபத்தில். அது புதுக்கோட்டை மேல ராஜவீதி. நாங்கள் வோடஃபோன் ஸ்டோருக்கு முன் நின்று கொண்டிருந்தோம்.

அவர் எங்களுக்கு இடப்புறம் நின்று கொண்டிருந்தார். அவருக்கு அருகே ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். கல்லூரி இரண்டாம் வருடமாக இருக்கலாம். சுடிதார் அணிந்து, முதுகிலே ஒரு ஷோல்டர் பேக். அவர் மகளாக இருக்கக் வேண்டும்.

தங்கியிருந்த இடத்தில் இருந்து கிளம்பி மக்களை சந்தித்ததவாறே, மண்டபத்தை அடைத்திருந்தார் தளபதி. வரும் வழியெங்கும் மக்கள் வெள்ளம். ராஜவீதியும் மக்களால் நிரம்பியிருந்தது, நிகழ்ச்சி முடிந்து செல்லும் தளபதியை காண்பதற்காக.

என் வலப்புறம் நின்று கொண்டிருந்த கைலி கட்டியிருந்தவரை, பேண்ட் அணிந்த ஒருவர் அணுகினார். "எவ்வளவு நேரம் ஆகும்?',என்றுக் கேட்டார். "கொஞ்சம் நேரத்தில் வந்துடுவாருன்னு நினைக்கிறேன். பார்க்கறத்துக்கா?". "ஆமாம். வேலையா டவுனுக்கு வந்தேன். பார்த்துட்டு ஊருக்கு போலாம்னு. எல்லார் கிட்டயும் பேசறாராமே".

எதிரில் இருந்த போர்டு இழுத்தது. ஜில் ஜில் ஜிகர்தண்டா. சென்று ஆர்டர் செய்தோம். கலர்,கலராக சர்பத் சிரப் ஊற்றினார். ஜவ்வரிசி கரைசலை ஊற்றினார். ஒரு அய்ஸ்கிரீம் ஸ்கூப் போட்டார். சாப்பிட்டுக் கொண்டே எதிரில் பார்த்தேன்.

நான் நின்றிருந்த இடத்தில் இப்போது வேறு ஒருவர் வந்து நின்றார். வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். உற்றுப் பார்த்தேன் பி ஜே.பி கரை வேட்டி. அவர் தளபதி வாகனம் நிற்கும் திசையை ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தார்.

ஜிகர்தண்டாவை முடித்து விட்டு, பழைய படி எதிர்புறம் சென்றேன்.  என்னை சுற்றி இப்போது கைலி நபர், பிஜேபிக்காரர், நீல சட்டைக்காரர். நீலசட்டை மகளோடு பேசிக் கொண்டிருந்தார்.

இப்போது தளபதி வாகனம் நிற்கும் பக்கத்தில் இருந்து திமுக கரை வேட்டியோடு வந்தவர், நீலசட்டையை பார்த்து நின்றார். அவர் நீலத்திடம் ஏதோ கேட்க, அவர் தன் மகளைக் காட்டி ஏதோ சொன்னார்.

இந்த நேரத்தில் தளபதி வாகனம் நின்ற இடத்தில் பரபரப்பு. வாகனங்கள் கிளம்ப ஆரம்பித்தன. முதலில் மீடியா வாகனம். நான் இப்போது எதிர்புறம் நகர்ந்தேன், தளபதி அவர்களை படம் எடுக்க. ஆனால் முக்கிய நோக்கம், என்னை சுற்றி நின்றவர்களின் ரியாக்‌ஷனை பார்ப்பது.

கைலிக்காரர் தூரத்தில் வாகனத்தை பார்க்கும் போதே கையை தூக்கி அசைக்க ஆரம்பித்தார். பிஜேபி மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார். கல்லூரிப் பெண் இன்முகத்தோடு கைக் காட்டினார். நீலசட்டையும் இப்போது கை தூக்கியிருந்தார். மடித்துக் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து விட்டார். அதிமுக கரை வேட்டி.

தளபதி மகிழ்வோடு கையசைக்க, வாகனம் கடந்தது. அந்தப் பெண் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

# விடியல் மீட்பு நாயகன், மனங்களை கவரும் நாயகன் !  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக