பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 6 நவம்பர், 2015

கத்தார் பாடம்

பார்வையை இழுத்தது அந்தப் பரந்த, விரிந்த பூங்கா. பெரும் புல்வெளி. கார் கடக்கும் போது உற்று நோக்கினேன். கத்தார் இஸ்லாமிய அருங்காட்சியகத்தில் இருந்து வெளியில் வரும் போது பார்த்தேன்.

நான் பார்ப்பதை கவனித்து விட்டு, "இதில் இன்னொரு விசேஷம் இருக்கிறது"என்றார் பாலா. என்ன என்றேன். "பூங்காவின் கீழே வாகன நிறுத்தம் இருக்கிறது",என்றார். "பூங்காவுக்கு வர்றவங்க நிறுத்த தானே?" என்று கேட்டேன்.

"பூங்காவுக்கு வர்றவங்க மட்டுமில்ல, பின்புறம் இருக்கும் நகரப் பகுதிக்கு வர்றவங்க நிறுத்தவும். 3000 கார் நிறுத்தலாம்" என்றார். இருக்கும் இடத்தை சரியாக உபயோகிக்கும் திட்டம்.

எனக்கு சென்னை நினைவு வந்தது. தியாகராய நகருக்கு இது போல ஒரு ஏற்பாடு செய்தால், பாண்டி பஜார், உஸ்மான் ரோடு ஆகியவை நிம்மதியாய் மூச்சு விடும். சென்னை மட்டுமல்ல, பெரு நகரங்களில் கையாள வேண்டிய உத்தி.

அந்த முக்கிய சாலையின் இன்னொரு பக்கம் செல்லும் போது ஒரு மண் முகட்டைக் காட்டினார் மதன். "அண்ணா இதப் பாருங்க". கட்டிடப் பணிக்கு குவிக்கப்பட்டுள்ளதோ என நினைத்தேன்.

"இந்த சாலைக்கு கீழே மெட்ரோ ரயில் வேலை நடக்குது. அங்கே அள்ளப்படுகிற மண் அத்தனையையும் கன்வேயர் பெல்ட் மூலம் இங்கே கொண்டு வந்து சேர்க்கிறார்கள். பிறகு வெளியேற்றுகிறார்கள்.

லாரிகள் மூலம் வெளிக் கொண்டு வந்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அது தவிர்க்கப்பட்டிருக்கிறது. அடுத்து மாசும் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது", என்றார்.

செலவு பிடிக்கும் காரியம் என்றாலும் அதன் பலன் கூடுதல். இயற்கை வாயு இருப்பதால் கத்தார் அரசு இப்படி செலவு செய்கிறது என்று கொண்டால் கூட, நம் நாட்டிற்கு ஏற்ற செலவு பிடிக்காத குறைந்தத் தொழில்நுட்பங்களை முயற்சிக்கலாம்.

நாட்டின் கட்டமைப்புத் துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளை வளர்ந்த நாட்டின் பணிகளை பார்வையிட அனுப்ப வேண்டும். பழமை மனப்பான்மையில் இருந்து வெளிக் கொணர வேண்டும்.

அரசு பெரும் பொருட் செலவு செய்யும் அய்.அய்.டி போன்ற ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்களை, அரசு துறைகளோடு இணைந்து செயல்பட வைத்து பயன்படுத்த வேண்டும்.

# முன்னேற்றத்திற்கு முயல்வோம் !