பிரபலமான இடுகைகள்

புதன், 24 பிப்ரவரி, 2016

அம்பில் தர்மலிங்கம்

"அம்பில் அப்பாவயும், உங்களயும் பாக்கனும்னு ஆசப்படறாரு. ஒடம்பு ரொம்ப சரியில்லாம இருக்காரு. ஆஸ்பத்திரி போய் பாத்துட்டு வந்து ஊருல தான் இருக்காரு". சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள 15.02.2016 அன்று சென்னை சென்று கொண்டிருந்த போது இந்த அலைபேசி அழைப்பு.

"அடடா, நான் இப்போ விழுப்புரம் தாண்டிட்டேன். நாளைக்கு சட்டமன்றம் கூடுது. நேத்து பூரா பொன்பரப்பி, மருதூர் பக்கந்தான் இருந்தன். சொல்லி இருந்தா வந்து பாத்திருப்பேனே",என்றேன். "சரி. ஊருக்கு வந்தப்புறம் வந்து பாருங்க",என்றார் அம்பிலின் அண்ணன் மகன்.

அம்பில் என்றால் தர்மலிங்கம். செந்துறை ஒன்றியம் குமிழியம் கிராமத்தை சேர்ந்தவர். 92 வயது.

அன்பில் தர்மலிங்கம் அவர்கள் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுகவின் செயலாளராக வலிமையாக செயல்பட்டவர். இந்த தர்மலிங்கம் அவரை போல்  குமிழியம் கிராமத்தில் கழகத்தின் வலுவான மனிதராக இருந்தக் காரணத்தினால், "அன்பில்" என கழகத் தோழர்களால் அழைக்கப்பட்டார்.

அன்பில் என்பது கிராமத்து வழக்கில் அம்பில் ஆனது. கழகத்தவருக்கு மட்டுமல்லாமல் சுற்று வட்டாரத்திலும் அம்பில் என்றே ஆகிப் போனார். தர்மலிங்கம் என்பதை விட அம்பில் என்றே அறியப்பட்டார். நெடிதுயர்ந்த உருவம். ஒல்லியான தேகம். கணீர் என்றக் குரல். எந்தக் கும்பலிலும் தனித்துத் தெரிவார்.

எனது தந்தையாருக்கு நெருங்கிய நண்பர். கழக நிகழ்ச்சிகள், மாநாடுகள்,  தேர்தல் பணி என்றால் குடும்பப் பணியை தள்ளி வைத்து விட்டு முழுவீச்சில் செயல்படுவார். எதிரணியினர் வாதம் செய்தால், கறாரான வார்த்தைகளில் நறுக்குத் தெரித்தார் போல் பேசுவார். எனக்கு இரண்டுத் தேர்தல்களிலும் பம்பரமாக பணியாற்றியவர்.

புதன்கிழமை இரவு குமிழியம் கிராமத்திலிருந்து பழனிவேல் அழைத்தார். "அம்பில் பேசனும்கிறார்", என்று அலைப்பேசியை அவரிடம் கொடுத்தார். "தம்பி, அப்பா எப்படி இருக்காங்க. ரெண்டு பேரையும் பாக்கனும்னு ஆச" என்றார் அம்பில். "அப்பா வர்றது சிரமம். எனக்கு சனிக்கிழமை வர சட்டமன்றக் கூட்டம் இருக்கு. முடிச்சு வந்து, ஞாயிற்றுக்கிழமை காலைல உங்கள பாத்துட்டு மத்த வேலைய பார்க்கிறேன்"என்றேன்.

"ஆட்சிய பிடிச்சுடனும். கலைஞர் முதலமைச்சராகனும். கடுமையா வேல பாருங்க. எனக்கு தான் முடியல",என்றார். 92 வயதில், இறுதிக் கட்டத்தில் இருந்தாலும் என்ணம் எல்லாம் கழகம் தான். "அதெல்லாம் கவலப் படாதீங்க. தலைவர் தான் முதலமைச்சர். நீங்களும் நல்லா இருப்பீங்க",என்றேன். "சரி, வந்த உடனே வாங்க" என்றார் அம்பில்.

சட்டமன்றம் வியாழனில் இருந்து புறக்கணிப்பு என்றாலும், சில பணிகள் முடித்து, சனிக்கிழமை காலை தான் கிளம்பினேன். மாலை பொன்பரப்பி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக குமிழியம் சென்று அம்பில் அவர்களை சந்திப்பதாகத் திட்டம். அதற்குள் காலம்  முந்திக் கொண்டது.

அம்பில் மறைவுச் செய்தி. நேரே குமிழியம் சென்றேன். கழக வேட்டியுடன், தலைப்பாகைக் கட்டி படுத்திருந்தார். தூங்குவது போலவே இருந்தார் அம்பில். இறுதி ஊர்வலத்தில் கட்சி வேறுபாடின்றி ஊரார் திரண்டனர்.

அம்பில் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும்.

# அம்பில் என்றும் இருப்பார் மனதில் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக