பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

திராவிட இயக்க பேராசிரியர்

பேச்சு ஒரு கலை. அதுவும் மக்களை கவரும் விதத்தில் பேசுவது சிரமம்.  அனைவருக்கும் புரிவது போல் பேசுவது சிரமம். கவரும் விதத்திலும், எளிமையாக புரியும் விதத்திலும் பேசுவது மிகச் சிரமம். 

அதையே ஆதாரத்தோடு, அழுத்தமாக பேசுவது மிக, மிக சிரமம். அதில்  முத்திரையை பதித்து  பேசுவது சிறப்பு. பேசும் குரலைக் கொண்டும், தொனியைக் கொண்டும், கருத்தைக் கொண்டும், பேசுபவரை அடையாளப் படுத்தும் வகையில் பேசுவது தனிச் சிறப்பு.

அப்படி பேசுவோர் மிகச் சிலர். அதில் ஒருவர் தான் அய்யா சுப.வீரபாண்டியன். கவரும் வகையில், எளிதாகப் புரியும் வகையில், ஆதாரத்தோடும், அழுத்தத்தோடும், முத்திரை பதியும் வகையில் பேசுபவர் அய்யா தான்.

மாநாட்டில் பேசும் மணி நேரப் பேச்சாக இருந்தாலும், கூட்டத்தில் பேசும் நிமிடக் கணக்கு பேச்சாக இருந்தாலும், வாட்ஸ் அப்பில் பரப்பும் நொடிக் கணக்கு பேச்சாக இருந்தாலும் முத்திரைப் பதிப்பவர் அய்யா சுப.வீ.

கருப்புச் சட்டை, நெருப்புக் கொள்கை,  கொள்கை தெளிவு,   சிரிக்கும் விழி, இனிக்கும் மொழி, அணுக்கச் சிரிப்பு,  நெருக்க சினேகம் என ஒரு வித்தியாச மனிதர் சுப.வீரபாண்டியன்.

இவரது தந்தை காரைக்குடி சுப்பையா, தந்தை பெரியாரின் நெருங்கிய நண்பர். திராவிட இயக்க தீவிர செயற்பாட்டாளர். பெரியாரின் பெருந்தொண்டர் என்பதில் பெருமிதம் கொள்பவர்.

சுப.வீ அவர்களது தாயார் விசாலாட்சி அம்மாள். செட்டிநாட்டு பகுதியில் கருப்பு சேலை உடுத்தி, கழகப் பணியாற்றிய முதல் பெண்மணி. இவரது தலைமையில் ஒரு திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கிய போது அறிவித்த 96 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்றவர் பெரியவர் ராம.சுப்பையா. சட்டமேலவை உறுப்பினராக பணியாற்றியவர். தலைவர் கலைஞர், எம்.ஜி.ஆரோடு நெருக்கமானவர்.

சுப.வீ அவர்களது சகோதரர் எஸ்.பி.முத்துராமன் பிரபல திரைப்பட இயக்குநர். குடும்பப் பிண்ணனி இவரை திராவிட இயக்க உணர்வாளர் ஆக்கியது. இவர் கற்ற கல்வி தமிழ் பற்றாளர் ஆக்கியது.

கல்வி பேராசிரியர் ஆக்கியது. பணியில் இருந்த போதும், பெரியார் கொள்கையை பரப்பும் பணியை நிறுத்தவில்லை. அதே போல ஈழ விடுதலையில் தீராத ஆர்வம் கொண்டவர். அந்த ஆர்வமே அவரை களத்தை நோக்கி நகர்த்தியது.

அப்போது தான் திலீபன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இறுதியில் தன் உயிரையே தந்தார் திலீபன். திலீபன் மரணம் தான் சுப.வீ அவர்களை களத்தில் இறக்கியது. ஈழ விடுதலைக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் ஈழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர் அய்யா சுப.வீ அவர்களாகத் தான் இருக்கும். வோட்டரசியலுக்கு வராமல் கொள்கைக்காக முழங்கி அதிக இழப்பை சந்தித்தவர்.

விடுதலைப்புலிகளிடம் வான் படை இருக்கிறது என்ற செய்தியை உலகிற்கு முதன்முதலில் அறிவித்தவர் சுப.வீ அவர்கள் தான். இன்னும் பல பணிகளை வெளி உலகிற்கு தெரியாமல் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஆற்றியிருக்கிறார்.

அதற்கு அவருக்கு கிடைத்த பரிசு ஓன்றரை ஆண்டுகள் சிறை. ஆமாம், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 'பொடா' சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார்.   கைது நடவடிக்கை அவரை இன்னும் தீவிரமாக இயங்க வைத்தது.

'கருஞ்சட்டைத் தமிழர்' என்ற மாதமிருமுறை இதழை லாப நோக்கமின்றி, கொள்கைக்கான பணியாக நடத்தி வருகிறார். தொடர்ந்து நூல்களும் எழுதி தமிழுக்கான பங்களிப்பை அளித்து வருபவர்.

சமீபகாலமாக வாட்ஸ் அப்பில் இவரது 'ஒரு நிமிடப் பேச்சு' மிகப் பிரபலம். கொள்கை ரீதியாக மாறுபட்டோரும் இவரது பேச்சை தினமும் கேட்க தவறுவதில்லை. சொல்ல வரும் செய்தியை ஒரு நிம்மிடத்திற்குள் அழுத்தமாக, சுருக்கமாக வெளியிடுவது இவரால் மாத்திரமே முடியும்.

தலைவர் கலைஞர் மீது இவருக்கு அளப்பற்ற மரியாதை. இவர் மீது தலைவருக்கு மிகுந்த அன்பு. பல விஷயங்களுக்கு தலைவர் இவரோடு கலந்துரையாடுவார்.

திராவிட இயக்க வரலாற்றை இளைஞரணிக்கான பயிற்சி பாசறையில் எடுத்துரைக்க , அய்யா சுப.வீ அவர்களையே முன்னிறுத்தினார் தளபதி அவர்கள்.

நேற்று அய்யா சுப.வீ அவர்களது பிறந்தநாள்.

# திராவிட இயக்க பேராசிரியர் சுப.வீ வாழ்க !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக