பிரபலமான இடுகைகள்

புதன், 31 மே, 2017

செகரட்டரி பன்னீர் !

அவரவர் எச்சத்தாற் காணப்படும். ஒருவரது வாழ்வு எப்படி இருந்தது என்பது அவர் விட்டு செல்லும் புகழ் மூலம் அறியப்படும். இது வள்ளுவரின் வாக்கு.

குறள் வழி பார்த்தால், 'செகரட்டரி' வாழ்க்கை மற்றோருக்கு பயன்பட்டது என்பது இன்று புலப்பட்டது. அரியலூரில் திரும்பியப் பக்கம் எல்லாம் செகரட்டரிக்கான கண்ணீர் அஞ்சலி பதாகைகள், சுவரொட்டிகள் தான். தொழிலதிபர்களும் வைத்திருந்தனர், ஆட்டோ ஓட்டுனர்களும்  வைத்திருந்தனர். சமூகத்தின் எல்லாத் தரப்பு மக்களது வருத்தமும் வெளிப்பட்டது.

பன்னீர்செல்வம் என்பதை விட  'செகரட்டரி' என்றே எல்லோருக்கும் நினைவுக்கு வருவார். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் அவர். அதனால் செகரட்டரி என்று பதவியின் பொருட்டு அலுவலகத்தில் அழைக்கப்பட்டவர், மக்களாலும் அழைக்கப்பட ஆரம்பித்தார். அரியலூரில் பல சங்கங்கள் உண்டு, பல செயலாளர்களும் உண்டு. ஆனால் இவரே 'செகரட்டரி'.

அரியலூர் மாவட்டத்தில் பெரிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், அரியலூர் நகரில் இருப்பது தான். சுற்றிலும் உள்ள நாற்பதுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கான சங்கம் இது. ஆயிரக்கணக்கான பால் உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சங்கம். ஒரு காலத்தில் திருச்சி அரசு பால் பண்ணைக்கு பெரும் பகுதி பாலை அனுப்பியது இந்த சங்கம் தான்.

ஆயிரக்கணக்கான குடும்பத்தின் வருமானத்திற்கு முதுகெலும்பாக திகழ்வது இந்த சங்கம். இந்த சங்கத்தில் எழுத்தராகப் பணிக்கு சேர்ந்தவர் தான் அண்ணன் பன்னீர்செல்வம். படிப்படியாக உயர்ந்து செயலாளர் ஆனார். சங்கப் பணியாளர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார். காரணம் சிறுவயதிலிருந்தே அரசியல் ஈடுபாடு கொண்டவர். காங்கிரஸ் கட்சியின் தீவிரத் தொண்டர்.

பணியாளர்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தவர், அதற்கான அமைப்புகளில் ஈடுபாடு கொண்டு செயல்பட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்திற்கான கோரிக்கைகளுக்காக அரசுடன் போராடுவது, பேச்சுவார்த்தை நடத்துவது என எப்போதும் பரபரப்பாக இருப்பார்.

சங்கப் பணிகள் இருந்தாலும், கூட்டுறவு சங்கத்தின் பணிகளில் தொய்வில்லாமல் பார்த்துக் கொண்டார். நூற்றுக்கணக்கான பணியாளர்களைக் கொண்ட அந்த சங்கத்தை நிர்வகிப்பது  பெரும் பணி.  பணியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் எல்லோரது அன்பையும் ஒருங்கே பெற்றிருந்தார். இப்படி ஒரே நேரத்தில் எல்லோரது அன்பையும் பெறுவது சர்க்கஸ் மாதிரி.

அதில் கைதேர்ந்தவர் அண்ணன் செகரட்டரி பன்னீர். இன்னொரு பக்கம் கட்சிப் பணியும் தொடர்ந்தார். அரசியல் ரீதியான குறுக்கீடுகள் வந்தாலும் அத்தனையையும் சமாளித்து விடுவார். பால்பண்ணைப் பணியில் முத்திரைப் பதித்து ஓய்வுப் பெற்றார். பிறகு பொதுவாழ்வில் ஈடுபட்டார். 2011 சட்டமன்றத் தேரதலில், அரியலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். கணிசமான வாக்குகள் பெற்றார்.

அவரது பணியில் சில விமர்சனங்கள் இருந்தாலும், பெரும்பான்மையினரின் அபிமானத்தோடு பணியாற்றினார். அதன் பலன் இன்று வெளிப்பட்டது, மறைவிற்கான அஞ்சலியில்.

அஞ்சலி செலுத்த வந்தவர்களில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பா.ம.க கம்யூனிஸ்ட், வி.சி.க என அனைத்துக் கட்சியினரும் இருந்தனர். காலை முதல் மாலை வரை கிராமத்து மக்கள், நகரத்தை சேர்ந்தவர்கள் என சாரி, சாரியாக வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலமும் அவரது பணியின் சிறப்பை வெளிப்படுத்தியது. ஒரு மனிதர் இவ்வளவு பேரிடம் பழகி, அவர்களது அன்பை பெற முடியுமா என எண்ண வைத்தது.

# பன்னீர் இயற்கையில் கரைந்தாலும் மணக்கிறார் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக